திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கட்டிடத்தின் அருகிலேயே குண்டுமழை பொழிந்தது - உக்ரைனில் இருந்து திரும்பிய உடுமலை மாணவர் பேட்டி.!
உக்ரைன் - ரஷியா போரில் உக்ரைனில் தங்கியிருந்த மருத்துவக்கல்லூரி மாணவர், தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். மேலும், மத்திய, மாநில அரசுகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, ஜீவா நகரில் வசித்து வருபவர் ஜெயக்குமார். இவர் மருந்துக்கடை வைத்துள்ளார். ஜெயக்குமாரின் மகன் அஸ்வந்த். இவர் உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரின் மருத்துவக்கல்லூரியில் 5 ஆம் வருடம் பயின்று வருகிறார். ரஷியா - உக்ரைன் போர்ப்பதற்றத்தால் ஊர் திரும்ப இயலாமல் உக்ரைனில் சிக்கிக்கொண்டார்.
இதனையடுத்து, மத்திய அரசின் ஆபரேஷன் கங்காவின் கீழ் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களில், அஸ்வந்த்தும் டெல்லிக்கு வந்தடைந்தார். அங்கிருந்து திருப்பூருக்கு வந்த அஸ்வத்துக்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஆனந்த கண்ணீருடன் வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து, அஸ்வந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் கூறுகையில், "நானும், எனது நண்பர்களும் உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தோம். உக்ரைன் - ரஷியா போர் அறிவிப்பு வந்தாலும், கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கியது. எஞ்சியுள்ள 3 செமஸ்டரை எழுதி பட்டம் பெற்றுவிடலாம் என நாங்களும் இருந்தோம். அந்நாட்டு அரசும் ரஷியா உக்ரைனை தாக்காது என முதலில் நம்பி இருந்தது.
போரினால் கல்லூரி நிர்வாகம் திடீரென ஆன்லைன் வகுப்பு அறிவிக்க, அனைவரும் இந்தியா செல்லலாம் என முடிவெடுத்தோம். ஆனால், விமான டிக்கெட் கிடைக்கவில்லை. மேலும், கட்டணமும் அதிகரித்தது. எனக்கு கடந்த பிப். 25 ஆம் தேதி அதிகாலை கீவ் நகரில் இருந்து புறப்பட விமான டிக்கெட் கிடைத்தது. ஆனால், 24 ஆம் தேதி காலையில் ரஷியா போரினை தொடங்கிவிட, அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் பதுங்கு குழியில் தங்கினோம்.
அப்போது, பிரட் மற்றும் பிஸ்கெட் பாக்கெட் மட்டுமே எங்களிடம் இருந்தது. நாங்கள் இருந்த 500 மீட்டர் தொலைவில் குண்டுகள் விழுந்ததால், அங்கிருந்து வெளியேற இந்திய தூதரக அதிகாரிகள் அறிவுறுத்தினர். சிலமணிநேரம் போர் நிறுத்தம் இருந்தபோது, பிப். 28 ஆம் தேதி நண்பரின் வீட்டிற்கு சென்றோம். அங்கிருந்து வாடகை காரில் இரயில் நிலையத்திற்கு சென்றோம். இரயில் நிலையத்திலோ உக்ரைன் நாட்டினை சேர்ந்த பெண்களை மட்டுமே ஏற்றிக்கொண்டார்கள்.
அதனைத்தொடர்ந்து, மார்ச் 4 ஆம் தேதி நடந்தே புறப்பட்டு, 15 கி.மீ தொலைவில் உள்ள போஸோஸின் என்ற எல்லையை அடைந்தோம். அங்கு உக்ரைன் இராணுவ அதிகாரிகள் இருந்தார்கள். இந்திய தூதரகம் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த மருத்துவமனையில் 3 நாட்கள் தங்கியிருந்து, 4 ஆவது நாளில் பேருந்தில் ருமேனியா அழைத்து செல்லப்பட்டோம். ருமேனியாவில் எங்களை நன்றாகவே கவனித்தனர்.
மார்ச் 7 ஆம் தேதி எங்களுக்கு இந்தியா செல்ல விமானம் கிடைத்தது. இந்த விமானம் மார்ச் 8 ஆம் தேதி காலை 4 மணியளவில் டெல்லிக்கு வந்தது. அங்கு தமிழக மாணவர்களை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி, தமிழ்நாடு இல்லத்திற்கு அழைத்து சென்றார்கள். டெல்லியில் இருந்து கோவைக்கு புறப்பட்ட விமானத்தில் 29 பேர் பயணம் செய்து இங்கு வந்தோம். உக்ரைனில் இருந்து கோவை வரும் வரை பயணத்திற்கு என எந்த செலவும் செய்யவில்லை. மத்திய, மாநில அரசுகள் எங்களுக்கு உதவி செய்தது. பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்" என்று தெரிவித்தார்.