நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரம்; விசிக தலைவர் கடும் கண்டனம்.!



VCK President Thirumavalavan Condemn to Nelllai Caste Issue 

 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமூர்த்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு வரும்போது, 6 பேர் கொண்ட கஞ்சா கும்பலால் ஜாதியைக்கேட்டு இடைமறித்து தாக்கப்பட்டனர். இவ்விவகாரத்தில் பொன்னுமணி (வயது 25), நல்லமுத்து (வயது 21), ஆயிரம் (வயது 19), ராமர் (வயது 22), சிவா (வயது 22), லட்சுமணன் (வயது 20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

இவர்கள் 2 இளைஞர்களை மிரட்டி, தாக்கி, பணம் பறித்து கொடுமை செய்துள்ளனர். மேலும், உச்சகட்டமாக சிறுநீர் கழித்து அவமதித்துள்ளனர். மாலை 7 மணியளவில் தொடங்கிய சர்ச்சை, நள்ளிரவு 1 மணிவரை நீடித்துள்ளது. ஆற்றுக்கு சென்றவர்கள் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் ஆற்றுக்கு சென்றபோது விபரம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நெல்லை மாவட்டம் மணிமூர்த்தீசுவரம் பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் இருவர் சாதிவெறிக் கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்கள் மீது சிறுநீர் கழித்து இழிவுப்படுத்தியுள்ளனர். இந்த அநாகரிகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.  

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் இருவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன்.  

சாதிவெறி கொண்ட அந்தச் சமூகவிரோதக் கும்பல் இரவு ஏழு மணியிலிருந்து நள்ளிரவு ஒரு மணி வரையில் அவ்விளைஞர்கள்  இருவரையும் நிர்வாணப்படுத்தி அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். அத்துடன், அவர்களிடமிருந்து அலைபேசிகள், இருசக்கர வண்டி மற்றும் பணமெடுக்கும் ஏடிஎம் அட்டை போன்றவற்றைப் பறித்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஆடையில்லாமலேயே அவர்கள் அங்கிருந்து தப்பித்து வீடுவந்து சேர்ந்துள்ளனர். அதன்பின்னரே காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதனையடுத்து காவல்துறையினர் சாதிவெறிக் கும்பலை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்துள்ளனர். 

அதேவேளையில், குற்றவாளிகளைப் பிணையில் வெளிவிடாமல் வழக்கை விரைந்து விசாரித்து உரிய தண்டனை கிடைத்திட காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.