உதகை வனப்பகுதியில் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்களை; தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்..!!



Women swept away by river floods in Utkai Forest

நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் அருகேயுள்ள சீகூர் வனப்பகுதியில் எழுந்தருளியுள்ள ஆனிக்கல் மாரியம்மன் கோயிலில் நேற்று  கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. 

இந்த திருவிழாவில் உதகை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். நேற்று மாலை தீப திருவிழாவில் கலந்துகொண்ட மக்கள் வெளியே வரும் போது அங்கிருக்கும், ஆனிக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது ஜெக்கலொரை கிராமத்தை சேர்ந்த சரோஜா (65), வாசுகி (45), விமலா (35), சுசீலா (56) ஆகிய நான்கு பெண்கள் ஆற்றை கடக்க முயன்றனர். அப்போது ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

நேற்று மாலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் ஆற்றில் அடித்து சொல்லப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு நேரம் மற்றும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் அவர்களை மீட்க்கும் பணியில் சிரமம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களை தேடும் பணி நிறுத்தப்பட்டது.

மீண்டும் இன்று காலை 7 மணியளவில் மீட்பு பணி தொடங்கியது. வன துறையினர் மற்றும் சுமார் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து தேடியதில் அவர்கள் அடித்து செல்லப்பட்ட இடத்திலிருந்து சுமார் 1கி.மீ. தொலைவில் மூன்று பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களை அடையாளம் காணும் பணியானது தற்போது நடந்து வருகிறது.

ஆற்றில் சிக்கிய  மேலும் ஒருவரின் உடலை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆற்றில் தொடர்ந்து வெள்ளமானது அதிகரித்து வருவதால் தேடுதல் பணியானது மிகவும் கடினமாக உள்ளது. இருந்த போதிலும், வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், காவல்த்துறையினர் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.