காதல் திருமணம் செய்து வருடமாகியும் ஏற்காத பெற்றோர்கள்.. காதல் ஜோடி மரத்தில் தூக்கிட்டு சாவு.!
பெற்றோரை எதிர்த்து காதல் ஜோடி திருமணம் செய்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில், பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற எண்ணத்தில் வீட்டிற்கு வந்து விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் மாவட்டம், சிங்கமாரனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ராகேஷ் (வயது 21). இதே கிராமத்தை சேர்ந்த சிறுமி அர்ச்சனா (வயது 18). இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும் போது ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இவர்களின் காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோர்களுக்கும் தெரியவரவே, அவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இருவரையும் நேரில் அழைத்து எச்சரித்தும் இருக்கின்றனர். இதனால் பயந்துபோன காதல் ஜோடி, கடந்த வருடம் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளது.
தலைமறைவாக இருந்த காதல் ஜோடி, திரைப்பட பாணியில் 1 வருடம் ஆகிவிட்டதால் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற எண்ணத்தில் சொந்த கிராமத்திற்கு வர, இருதரப்பு பெற்றோரும் காதல் ஜோடியை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், வீட்டினுள் அனுமதிக்காமல் வெளியேற்றி இருக்கின்றனர். இதனால் காதல் ஜோடி மனமுடைந்து காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நேற்று அதிகாலையில் அப்பகுதியில் இருக்கும் மரத்தில் அர்ச்சனா மற்றும் ராகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த பிளிகெரே காவல் துறையினர், காதல் ஜோடியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.