பேருந்து பயணிகளை சரமாரியாக சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்.. 19 பேர் பரிதாப பலி..!



West Africa Burkina Baso Jihad terrorist attack 19 Died

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஐ.எஸ் போன்ற பல்வேறு பயங்கரவாத அமைப்பினர் மக்களை கொன்று குவித்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு பாதுகாப்பு படை பல முயற்சிகள் எடுத்தாலும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள பர்கினோ பாசோ நாட்டில், ஓவாடுகா நகரில் இருந்து நியாமி நகருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து 12 க்கும் மேற்பட்ட ஜிகாதி தீவிரவாதிகளால் இடைமறிக்கப்பட்டுள்ளது.  

மக்களை பேருந்தில் இருந்து கீழே இறக்கிய பயங்கரவாதிகள், சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 19 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், பேருந்தில் தீ வைத்து எரித்து அங்கிருந்து பயங்கரவாத கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தகவலறிந்து சென்ற காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தற்போது வரை எந்த இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை என்றும், இதுபோன்ற தாக்குதல்களை ஜிகாதி அமைப்பினரே மேற்கொள்வார் என்றும் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.