திடீரென பிரேக் அடித்த லாரி.. தனியார் பேருந்தின் வேகத்தால் 6 பேர் பரிதாப பலி..!
தறிகெட்ட வேகம் காரணமாக நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் இன்று காலை நடந்த பயங்கர விபத்தில், 6 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ள சூரத் நகரில் இருந்து ராஜூலா நோக்கி, தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த பேருந்து பாவ்நகர் பகுதியில் சென்றது.
அப்போது, சாலையில் முன்னால் சென்று கொண்டு இருந்த லாரி, திடீரென பிரேக் பிடித்ததாக தெரியவருகிறது. இந்த விஷயத்தை தனியார் பேருந்து ஓட்டுநர் எதிர்பார்க்காத நிலையில், அதிவேகத்தில் பேருந்து சென்றதால் லாரியின் பின்பக்கம் பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.
இதையும் படிங்க: தேனிலவு முடித்த தம்பதிக்கு வழியில் காத்திருந்த எமன்; உறக்கத்தால் துள்ளத்துடிக்க பறிபோன 4 உயிர்.!
கண்ணிமைக்கும் நேரத்தில் கோரம்
நொடிப்பொழுதில் நடந்த விபத்தில், பேருந்தின் பாதியளவு பாகங்கள் அப்படியே லாரியில் சொருகி உருக்குலைந்தது. இதனால் பேருந்தில் பயணம் செய்த 6 பயணிகள் நிகழ்விடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயத்துடன் உயிருக்கு அலறித்துடித்தனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், இவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்தோர் தளஜா, பாவ்நகர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதையும் படிங்க: தலைக்கு வந்தது துப்பட்டாவுடன் போனது - நூலிழையில் உயிர் தப்பிய பெண்.. பதறவைக்கும் காணொளி.!