இந்திய அணியின் மிகப்பெரிய குறையை போக்கிய கேஎல்.ராகுல்! நிம்மதி பெருமூச்சு விட்ட ரசிகர்கள்
வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கும் உலகக்கோப்பை தொடரில் 10 அணிகளில் இந்தியாவும் கலந்து கொள்கிறது. இதுவரை இரண்டுமுறை உலகக்கோப்பையை வென்றுள்ள இந்திய அணி மூன்றாவது முறையும் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையில் இந்திய ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என சிறந்து விளங்கும் இந்திய அணி ஒருநாள் தரவரிசையில் இங்கிலாந்து அணிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி 3-2 என தோல்வியை தழுவியதால் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
உலககோப்பைக்கு முந்தைய தொடரில், அதுவும் சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் இந்திய அணி தொடரை இழந்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. இந்திய அணியை பொறுத்தவரை துவக்கவீரர்கள் தவான், ரோஹித் சர்மா, அடுத்து இடத்தில் கோலி என வலுவான கூட்டணி உள்ளது. மிடில் ஆர்டரில் தோனி, ஹார்டிக் பாண்டியா ஆட்டத்தை இறுதி வரை எடுத்து செல்லும் திறமை கொண்டவர்கள்.
ஆனால் இந்திய அணியின் மிகப்பெரிய கவலையாக இருந்துவருவது கோலிக்கு அடுத்து இடமான நான்காவது இடத்தில் யாரை களமிறக்குவது என்பது தான். இந்த இடத்திற்கு தகுதியான வீரரை தேர்வு செய்ய நியூசிலாந்து, ஆஸ்திரேலியா தொடர்களில் அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக் என பல வீரர்களை வைத்து இந்திய அணி சோதனை நடத்தியது. ஆனால் கடைசிவரை அந்த இடத்தை நிரப்ப சரியான வீரர் கிடைக்கவேயில்லை.
எனினும் அந்த இடத்திற்காக உலகக்கோப்பை அணியின் தேர்வாக கே எல் ராகுல், விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ் ஆகியோரை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. இந்நிலையில் இன்று வங்கதேசத்திற்கு எதிராக நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் கே எல் ராகுல் நான்காவது இடத்தில் இறங்கி சிறப்பாக ஆடி 108 ரன்கள் குவித்தார்.
14 ஆவது ஓவரில் 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி இரண்டாவது விக்கெட்டை இழந்தது. அதன் பிறகு களமிறங்கிய கே எல் ராகுல் தனது இடத்திற்கான தேவையை உணர்ந்து அனைவர்க்கும் நம்பிக்கை அளிக்கும் வண்ணம் மிக சிறப்பாக ஆடினார். ஐந்தாவது விக்கெட்டிற்கு தோனியுடன் ஜோடி சேர்ந்து ஆடிய கே எல் ராகுல் மற்றும் தோனி இருவருமே இந்த ஆட்டத்தில் சதமடித்தனர்.
இதன் மூலம் இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகவும் வலிமையாக இருப்பதை இருவரும் நிரூபித்துள்ளனர். இதனால் இதனை நாட்களாக அனைவருக்கும் கவலையாக இருந்த அந்த நான்காவது இடத்திற்கான குறையை கே எல் ராகுல் போக்கியுள்ளார். இதன் மூலம் அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.