கொலை, கொள்ளை நிறைந்த தமிழ்நாடு.. இதுதான் திராவிட மாடலா? டிடிவி தினகரன் கண்டனம்.!



TTV Dhinakaran Statement on 22 March 2025 

 

தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் படுகொலைச் சம்பவங்களால் பொதுமக்கள் பதற்றம் - அமைதிப் பூங்காவாக திகழ்ந்த தமிழகத்தை கொலைகளும், கொள்ளைகளும் நிறைந்த மாநிலமாக மாற்றிய திராவிட மாடல் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிடிவி அறிக்கை

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வலைப்பதிவில், "திருத்தணி அருகே இளைஞர் வெட்டிக் கொலை, ஈரோட்டில் ரவுடி வழிமறித்து படுகொலை, காரைக்குடியில் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வெளியே வந்தவர் ஓட ஓட விரட்டிக் கொலை, கும்பகோணத்தில் ஜாமீனில் வந்த ரவுடி கொலை என ஊடகங்களில் தினம்தோறும் வெளியாகிவரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன. 

இதையும் படிங்க: #Breaking: திமுக அரங்கேற்றும் மெகா நாடகம்.. தோலுரிக்க பாஜக போராட்டம் - அண்ணாமலை அறிவிப்பு.!

பாதுகாப்பு இல்லை

குடியிருப்புகள், பொது இடங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் முதல் தமிழகத்தின் பட்டிதொட்டிகள் வரை அடுத்தடுத்து அரங்கேறும் படுகொலைச் சம்பவங்கள் திமுக ஆட்சியில் சட்டமும் இல்லை ஒழுங்கும் இல்லை என்பதையே மீண்டும் மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் அமைந்திருக்கின்றன.  காவல்துறையின் கண்காணிப்பில் இருக்க வேண்டிய ரவுடிகள், துளியளவும் கட்டுப்பாடின்றி அவரவர் விருப்பம் போல எந்தவித அச்ச உணர்வுமின்றி செயல்படுவதே கொலைகளும், கொள்ளைகளும் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறியிருப்பதற்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

ttv dhinakaran

திமுக அரசு நாடகம்

முல்லைப் பெரியாற்றில் புதிய அணையை கட்டி தென் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்க முயற்சிக்கும் கேரளம், காவிரி டெல்டா விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் கர்நாடகம் என தமிழகத்தின் உரிமைகளை பறிப்பதையே குறிக்கோளாய் கொண்டிருக்கும் அண்டை மாநில ஆட்சியாளர்களை அருகில் அமரவைத்துக்கொண்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத தொகுதி சீரமைப்பு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்துவது தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளையும், அரசு நிர்வாகத்தின் மீதான ஊழல் புகார்களை திசைத்திருப்புவதற்கு திமுக அரசு நடத்தும் நாடகம் என்பதை தமிழக மக்கள் ஒவ்வொருவரும் நன்கு அறிவர்.

அரசுக்கு கோரிக்கை

எனவே, நாளொரு நாடகம் பொழுதொரு நடிப்பு, என தன்னைத்தானே பெருமை பேசும் விளம்பர மோகத்தை விட்டொழித்து, திமுக ஆட்சியின் அடையாளமாகவே மாறிவிட்ட கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் உரிய உத்தரவுகளை வழங்கிடுமாறு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். " என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: #Breaking: மாநில அரசை திட்டமிட்டு வஞ்சிக்கும் மத்திய அரசு? "ஒன்றிணைவோம் வா" - இந்த முறை வேற ரூட்டில்... முதல்வர் முக ஸ்டாலின்.!