"2026 தேர்தல் சூரசம்ஹாரம்; பாஜகவை கோவில் போல கட்டியிருக்கிறார் அண்ணாமலை" புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி.!!

வர இருக்கின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்துவதே தனது முதல் லட்சியம் என புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜகவின் தமிழ் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கிறார். நேற்று நடைபெற்ற கட்சியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாஜக உட்கட்சி தேர்தல்
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவரை தேர்ந்தெடுப்பதற்காகவும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சென்னை வானகரத்தில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த தேர்தலில் நெல்லை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் போட்டியின்றி பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் பதவியேற்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தேசியப் பொதுச் செயலாளர் தருண் சுக் மற்றும் பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள்
பாரதிய ஜனதா கட்சியின் உட்கட்சி தேர்தலில் முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தர்ராஜன், பொன் ராதாகிருஷ்ணன், நடிகர் சரத்குமார், சசிகலா புஷ்பா, கரு நாகராஜன் மற்றும் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் புதிய பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மேலும் புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நயினார் நாகேந்திரனுக்கு தலைவர் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதைப் போல 2026 இல் தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்துவதே தனது லட்சியம் என தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: "வருங்கால துணை முதல்வரே..." காங்கிரஸ் போஸ்டரால் பர்பரப்பு.!! திமுக கூட்டணியில் விரிசலா.?
2026 சட்டமன்றத் தேர்தலில் சூரசம்காரம்
இதனைத் தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன் தனக்கு முன்பிருந்த தலைவர்கள் கோவில் கட்டப்படுவதை போல பாஜக கட்சியை கட்டமைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் அதற்கான கும்பாபிஷேகத்தை நடத்துவதே தனக்கு இருக்கும் ஒரே இலக்கு எனவும் அவர் தெரிவித்துள்ளார். 2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தல் கும்பாபிஷேகமா.? இல்லை சூரசம்காரமா.? என்பது அப்போது தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். என் மண், என் மக்கள் என்ற யாத்திரையின் மூலம் பாரதிய ஜனதா கட்சியை அதன் முன்னாள் தலைவர் அண்ணாமலை வலுப்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: "எனக்கு பாஜக நல்ல பதவி தரும்..." முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி நம்பிக்கை.!!