காதலிக்க வற்புறுத்தி, ஜாதியை சொல்லி திட்டிய இளைஞன்: மனமுடைந்து 19 வயது கல்லூரி மாணவி தற்கொலை.!



Kallakurichi Ulunthurpet Girl Died Pondicherry Hostel Suicide 

 

கல்வி நிறுவனத்தில் பயின்று வரும் மாணவிகளிடம் காதல் சேட்டை காண்பித்து தற்கொலைக்கு தூண்டும் இளைஞர்களுக்கு கடும் தண்டனை வழங்கினால் மட்டுமே, இதுபோன்ற குற்றங்கள் குறையும். ஒரு பெண்ணின் மனதை கூட புரிந்துகொள்ள இயலாமல் காதலி, காதலி என வற்புறுத்துவது எந்த மாதிரியான சைக்கோத்தன காதல் என்பதை விவரிக்க வேண்டிய நிலையில் பல இளைஞர்கள் இன்றளவில் இருக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் பகுதியில் வசித்து வருபவர் முத்துக்குமரன் (வயது 46). இவரின் மகள் நந்திதா (வயது 19). புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியிருந்து, அரசு மகளிர் சமுதாயக் கல்லூரியில் லேப் டெக்னீசியன் ஆபரேட்டர் பிரிவில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம், கரசானூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் நந்திதாவின் தோழிக்கு அறிமுகமானவர் என கூறப்படுகிறது. ராஜேஷ் நந்திதாவை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிய வருகிறது. மேலும், தன்னை காதலிக்கும் படியும் வற்புறுத்தி இருக்கிறார். 

இது குறித்து நந்திதா பெற்றோரிடம் தெரிவிக்கவே, அவர்கள் ராஜேஷை எச்சரித்து இருக்கின்றனர். இந்நிலையில், தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்ததால், மனமுடைந்து இருந்த நந்திதா கடந்த ஏழாம் தேதி விடுதியில் தனியாக இருந்துள்ளார். 

அச்சமயம் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மயக்க ஊசியை அதிகமாக செலுத்தி மயங்கி கிடந்துள்ளார். சக மாணவிகள் அவரை மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

அவர் எழுதிய தற்கொலை கடிதத்தில், "காதல் தொல்லை காரணமாக தான் தற்கொலை செய்துகொள்கிறேன். ராஜேஷ் என்னை ஜாதி பெயரை சொல்லி அவமானப்படுத்தினார்" என எழுதியிருக்கிறார். இதனையடுத்து ராஜேஷ் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து காவல் துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.