முதல்வருக்கு எதிராக சர்ச்சை ட்விட்.. பாஜக நிர்வாகி அதிரடி கைது..!
மராட்டிய முதல்வருக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் ட்விட் செய்த பாஜக பிரமுகர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த மராட்டிய சட்டமன்ற தேர்தலை பாஜக - சிவசேனா இணைந்து சந்தித்த நிலையில், இறுதியில் நடந்த ஆட்சி பங்கீடு மற்றும் முதல்வர் பொறுப்பு தொடர்பான பிரச்சனையால், சிவசேனா தனக்கு நேரெதிர் கொள்கை கொண்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைத்து ஆட்சி அமைந்தது.
சிவசேனா தலைமையில் ஆட்சி அமைந்ததால் பாஜகவின் ஆட்சி அதிகாரம் மஹாராஷ்டிராவில் தடைபட்டது. இதனையடுத்து, எதிர்க்கட்சியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உருவாகிய பாஜக, தொடர்ந்து சிவசேனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது. அதற்கு சிவசேனா தரப்பிலும் அவ்வப்போது தக்க பதிலடி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நவிமும்பை பகுதியை சார்ந்த பாஜக நிர்வாகி சந்தீப் மத்ரே, அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவசேனா தொண்டர்கள், காவல் நிலையத்தில் சந்தீப் மத்ரேவை கைது செய்யக்கூறி புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பாஜக நிர்வாகி சந்தீப்பை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.