வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
3000 கோடி மதிப்பு சிலைக்கு சொந்தகாரரான சர்தார் படேல் பற்றிய சில குறிப்புகள்!
1875 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் நாள் குஜராத்தில் பிறந்தவர்தான் சர்தார் வல்லபாய் பட்டேல். இவர் இந்திய விடுதலைக்காக பல போராட்டங்களை நடத்திய முக்கியமான தலைவர்களில் ஒருவர். வழக்கறிஞரான இவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை குஜராத் மாநிலத்தில் நடத்தினார்.
இந்திய தேசிய காங்கிரசில் முக்கிய தலைவர்களோடு இருந்த இவர் 1942 இல் தொடங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் முக்கிய பங்காற்றினார். சர்தார் வல்லபாய் படேல் சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த மாபெரும் சிற்பி இவர்தான்.
தனித்தனியாக பிரிந்து கிடந்த 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றாக இணைத்து இந்தியா எனும் இந்த மாபெரும் தேசத்தை உருவாக்கிய பெருமை இவரையே சேரும். அகண்ட பாரதம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. அந்த இலக்குக்காக சகல வழிகளையும் பின்பற்றினார். சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தாலும் இரும்பு மனிதராக நின்று சமாளித்தார். இதற்காகத்தான் இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுகிறார்.
22 வயதில் தன்னுடைய மெட்ரிக்குலேசன் கல்வியில் தேர்ச்சி அடைந்த பட்டேல் தனக்குள்ளாகவே வழக்கறிஞர் ஆக வேண்டும் என தீர்மானித்து இங்கிலாந்து சென்று வழக்குரைஞர் படிப்பு படித்தார். அவர் மற்ற வழக்குரைஞர்களின் புத்தகங்களை வாங்கி படித்து இரண்டு ஆண்டுகளில் தேர்ச்சி அடைந்தார்.
அகமதாபாத்தில் வழக்கறிஞராக பணியாற்றியபோது உள்ளூர் மக்களின் பிரச்சினைகளுக்கு உதவி, பிரபலமானார். 1917-ம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார். சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது காந்திஜியின் உரையைக் கேட்டவர், வழக்கறிஞர் தொழிலை உதறிவிட்டு சுதேசி இயக்கத்தில் இணைந்தார்.
குஜராத்தில் கேடா என்ற இடத்தில் பயங்கர பஞ்சம். ஆங்கிலேய அரசிடம் வரி விலக்கு கேட்டு விவசாயிகள் போராடினர். அரசு பணியாததால் காந்தி, படேல் தலைமையில் வரிகொடாமைப் போராட்டம் வெடித்தது. அரசு பணிந்தது. வரி ரத்தானது. படேலின் முதல் வெற்றி இது! பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் படேலுக்கு வெற்றி கிடைத்தது. அப்போதிருந்து மக்களால் ‘சர்தார்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். அதன் பிறகு போராட்டங்களும் சிறைவாசமும் அவருக்கு வாடிக்கையாகிப் போனது.
வட்டமேஜை மாநாட்டு தோல்விக்குப் பிறகு காந்தி, படேல் கைது செய்யப்பட்டனர். எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது இருவருக்கும் நெருக்கம் வளர்ந்தது. சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்டார். இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக கருதப்பட்டார்.
இவ்வளவு பெருமைக்குரிய சர்தார் வல்லபாய் பட்டேல் தனது 75 வயதில் 1950ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி உயிரிழந்தார். 1991-ல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
இத்தகைய சிறப்புமிக்க சர்தார் வல்லபாய் படேலின் சிலையை நிறுவுவதற்காக ஐந்து வருடங்களுக்கு முன்பு குஜராத்தில் முதலமைச்சராக இருந்த இன்றைய பிரதமர் நரேந்திர மோடி 2013 அக்டோபர் 31 ம் நாள் இந்த சிலைக்கான அடிக்கல் நாட்டினார். நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது. 182 மீட்டர் உயரத்துடன் உலகிலேயே மிக உயரமான சிலையாக கருதப்படுகிறது. இந்த சிலையானது அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட 2 மடங்கு உயரம் கொண்டது.
இந்தியாவில் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் பட்டேலை கவுரவிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் நாட்டில் எத்தனையோ ஏழைகள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் 3000 கோடி செலவு செய்து இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு சிலை நிறுவ வேண்டியது அவசியம்தானா என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் விவசாயிகளுக்காக போராடிய வல்லபாய் பட்டேலின் சிலையை நிறுவுவதற்கு 7000 பழங்குடியின விவசாயிகளின் நிலங்களை அபகரித்து சிலை நிறுவ வேண்டும் என்பது தேவைதானா. குஜராத்தைச் சேர்ந்த 70 பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இந்த சிலை நிறுவுவதற்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினர். இந்த சிலை திறக்கப்படும் நாளான இன்று அந்த கிராம மக்கள் அனைவரின் வீடுகளிலும் உணவு சமைக்காமல் துக்கம் அனுசரிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.