ஆதிக்கத்தை தொடருமா இந்திய அணி?!: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்..!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நாக்பூரில் நடந்த முதலாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2 வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 3 வது டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதனையொட்டி முன்னதாகவே இந்தூர் வந்துள்ள இரு அணி வீரர்களும் கடந்த சில தினங்களாக கடும் பயிற்சி மேற்கொண்டனர். கடந்த 2 போட்டிகளைப் போலவே இந்த போட்டிக்கும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் அமைக்கப்பட்டுருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் 2 போட்டிகளிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்திய ஆல்-ரவுண்டர்கள் மொத்தம் 32 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினர். இது தொடரும் பட்சத்தில் இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவதுடன் ஜூன் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விடும்.
மேலும் டெஸ்ட் அணிகளுக்கான ஐ.சி.சி தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடிக்கும். ஏற்கனவே 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி, டெஸ்ட் போட்டியிலும் முதலிடத்தை பிடிக்கும் பட்சத்தில் இந்த மைல் கல்லை எட்டிய முதல் அணி என்ற பெயரை பெறும்.
இந்திய அணியின் சாதனையை தடுக்கும் விதமாகவும், ஏற்கனவே பெற்ற தோல்விகளுக்கு பழிதீர்க்கும் விதமாக வெற்றியை நோக்கி ஆஸ்திரேலிய வீரர்கள் போராடுவர் என்பதால் இந்த போட்டி சுவாரஸியம் மிக்கதாக இருக்கும்.