"2nd T20: சதம் விளாசிய ரோகித்; வாய்ப்பை தவறவிட்ட பண்ட்" இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா!
இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி இன்று லக்னோவில் நடைபெற்று வருகிறது. முதலாவது போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மே.இந்திய தீவுகள் அணியின் கேப்டன் ப்ராத்வெயிட் பவுலிங்கை தேர்வு செய்தார்.
வழக்கம் போல் இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஆட்டம் முதலே ரோஹித் மற்றும் தவான் இருவரும் அதிரடியாக ஆடினர். மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். முதல் விக்கெட்டுக்கான பார்ட்னெர்ஷிப் 100 ரன்களை கடந்தது.
சிறப்பாக ஆடிய தவான் 14வது ஓவரில் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 123 இருந்தது. வழக்கமாக 5 அல்லது 6 ஆவது இடத்தில் களம் இறக்கப்படும் ரிசப் பண்ட் இந்த ஆட்டத்தில் மூன்றாவது வீரராக களம் இறக்கப்பட்டார். அவருக்கு அளித்த இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த லோகேஷ் ராகுல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 26 ரன்கள் எடுத்தார்.
மறுமுனையில் மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கிய கேப்டன் ரோகித் சர்மா டி20 போட்டியில் தனது ஐந்தாவது சதத்தை கடந்தார். இவர் 61 பந்துகளில் 7 சிக்சர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் அடித்து 111 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனை தொடர்ந்து இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணியை பொறுத்தவரை இந்த ரன்களை எளிதாக கடக்கும் அளவிற்கு சிறந்த பேட்ஸ்மென்கள் உள்ளனர். யார் வெற்றி பெறுவார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.