பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
2 மாவட்டங்களில் அதிகனமழை, 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மழைக்கான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 4 ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் அதிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், மதுரை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
5 ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், தேனி, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
6 ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம்.
அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியசம் பதிவாகலாம். மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 4 ஆம் தேதி முதல் 8-ம் தேதி வரை குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல், கேரள - கர்நாடக கடலோர பகுதி, அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல், தமிழக கடலோர பகுதி, தெற்கு ஆந்திர கடலோர பகுதி, மத்திய அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 கி.மீ வேகம் வரை வீசும் என்பதால் இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.