முக்கோண கள்ளக்காதலால் நிகழ்ந்த கொலை!.. தொடரும் பதற்றம்!.. போலீஸ் குவிப்பு..!



Homicide due to three-way forgery at panruti

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள தட்டாஞ்சாவடி காந்தி நகர் காலனியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். திருமணமான இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பூமிகா என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவர் கணவரை இழந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். இவர் பண்ருட்டியில் உள்ள பேக்கரியில் பணிபுரிந்து வருகிறார்.

பூமிகா வேலைக்கு செல்லும் போது சக்திவேலின் ஆட்டோவில் செல்வது வழக்கம். இதன் காரணமாக  இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. சக்திவேலின் நண்பர் சுமன். இவர் களத்துமேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆவார். இவரும் அடிக்கடி பூமிகாவை ஆட்டோவில் அழைத்து சென்று பேக்கரியில் விடுவது வழக்கம்.

இந்த நிலையில் சுமன் பூமிகாவை விரும்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பூமிகா, ஆட்டோ டிரைவர் சக்திவேலுடன் நெருங்கி பழகுவதை சுமன் அறிந்தார். இது குறித்து நேரடியாக சுமன், தனது நண்பர் சக்திவேலிடம், நான்தான் பூமிகாவை விரும்புகிறேன் என்று கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து நேற்று இரவு சுமன், தனது நண்பர் சக்திவேலிடம் வந்து என்னை மன்னித்து விடு, இருவரும் முன்புபோல் பழகுவோம் என கூறியுள்ளார். இதன் பின்னர் சக்திவேலை மது அருந்த அழைத்து சென்றுள்ளார். பண்ருட்டி தட்டாஞ்சாவடி காளி கோவிலின் பின்புறம் சுடுகாட்டு பகுதியில் இருவரும் மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கு ஏறிய நிலையில்ம, சுமன் தனது நண்பர் சக்திவேலை பார்த்து இனி, பூமிகா விவகாரத்தில் நீ தலையிடக்கூடாது என்று கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு சுமனின் நண்பர்கள் அங்கு வந்தனர். அவர்கள் சுமனுக்கு ஆதரவாக பேசினபேசியதுடன் சக்திவேலை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார். அதன் பின்னர் அங்கிருந்து அவர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். இன்று காலை காளி கோவில் பகுதியில் சக்திவேல் பிணமாக கிடந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் பண்ருட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சுமன் மற்றும் அவரது நண்பர் ஒருவரையும் கைது செய்தனர். இதனையறிந்த சக்திவேலின் உறவினர்கள், தட்டாஞ்சாவடி-சித்தூர் சாலையில் மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சக்திவேலின் உறவினர்களிடம் பேச்சுவார்தை நடத்தியதுடன் மற்ற கொலையாளிகளை விரைவில் பிடிப்பதாக உறுதியளித்தனர். அதன் பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.