ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
பிரபல ரவுடியை ஓட ஓட வெட்டிய மர்ம கும்பல்... சென்னையில் பயங்கரம்...!

பிரபல ரவுடியை மர்ம கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிய சம்பவம் சென்னையில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருமங்கலம் நியூ காலனியில் வசிப்பவர் ரவுடி பத்மநாபன் (32). இவர் மீது வில்லிவாக்கம், திருமங்கலம் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடி பத்மநாபன் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பிறகு அந்த பகுதியில் பெயிண்ட் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், இரவு தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் பத்மநாபனை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
இதை பார்த்த, அந்த பகுதி மக்கள் திருமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பத்மநாபனை மீட்டு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் பத்மநாபனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்விரோதம் காரணமாக கொலை முயற்சி சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.