அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
"தடயமில்லாமல் தவறேது?" திருடவந்த இடத்தில், சார்ஜ் போட்ட செல்போனை மறந்து 20 ஆயிரத்துடன் ஓட்டம் பிடித்த திருடன்...!
தப்பு செய்பவன் கட்டாயம் தடயத்தை விட்டுச்செல்வான் என்பதற்கேற்ப திருடவந்த இடத்தில் பணத்தை பார்த்ததும் சார்ஜ் போட்ட செல்போனை மறந்து ஓடிய கொள்ளையனுக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தில் வசித்து வருபவர் சித்திரவேல். இவர் உணவகம் நடத்தி வருகிறார். நேற்று இரவில் உணவகத்தை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, நள்ளிரவு நேரத்தில் கடைக்குள் புகுந்த மர்ம நபர், டார்ச் வெளிச்சத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
முதலில் அவர் இருசக்கர வாகனத்தை திருட முயற்சித்த நிலையில், அதனை நகர்த்த முடியவில்லை. பின்னர், அங்கிருந்து கல்லாபெட்டியை நோக்கி பயணிக்க, டார்ச் எரிந்துகொண்டே இருந்ததால் செல்போனில் பேட்டரி தீர்ந்துபோயுள்ளது.
இதனால் அதனை கல்லாப்பெட்டி அருகே சார்ஜ் போட்டுவிட்டு, கல்லாவை திறந்து பார்த்துள்ளார். அப்போது, அதனுள் ரூ.20 ஆயிரம் இருந்துள்ளது. பணத்தை பார்த்ததும் செல்போனை மறந்த கொள்ளையன், பணத்துடன் சுவரை ஏறிக்குதித்து உற்சாகத்தோடு தப்பி சென்றுள்ளார்.
நள்ளிரவில் இயற்கை உபாதை கழிக்க வந்தவர் திருடன் சுவரேறி குதித்து சென்றதை கண்டு சித்திரவேலுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு கடைக்கு விரைந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சி.சி.டி.வி கேமிரா பதிவுகள் அடிப்படையில் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவான் எனவும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.