சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்தை வெளுத்து வாங்கிய டி.டி.வி. தினகரன்.!
அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் டி.டி.வி தினகரன்.
சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா, கார் மூலம் சென்னை புறப்பட்டு வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு சசிகலாவின் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள நிலையில், தான் தீவிர அரசியலில் இறங்குவது உறுதி என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், சசிகலா, டிடிவி தினகரனை இணைத்துக் கொள்ள மாட்டோம் என்று அதிமுகவினர் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், சசிகலாவை அதிமுகவில் சேர்க்கவே முடியாது என்றும், சசிகலா தன்னை டிடிவி தினகரனிடம் இருந்து காப்பற்றிக் கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.
டி.டி.வி தினகரனின் தொழிலே 'ஊத்திக்' கொடுப்பதுதான். ஊத்திக் கொடுத்தே குடியை கெடுத்தவர்கள் அவர்கள். கூவத்தூரில் எங்களுக்கு அவர்தான் ஊத்திக் கொடுத்தார் என பேசியுள்ளார். அமைச்சரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில் பதிலடி கொடுத்துள்ளார்.
நிதானம் இழந்து, தன்னிலை மறந்து, பதற்றத்தில், கோபத்தின் உச்சிக்கே சென்று, பதவி வெறியில் தங்களது பேராசைகள் எல்லாம் நிராசை ஆகிவிடுமோ என்ற பயத்தில் அதிகார போதை கண்ணை மறைக்கும் அளவிற்கு தாங்கள் வகிக்கின்ற பதவியின் மாண்பையும் மறந்து... (1/4)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) February 11, 2021
இதுகுறித்து டிடிவி தினகரன் அவரது ட்விட்டர் பதிவில், நிதானம் இழந்து, தன்னிலை மறந்து, பதற்றத்தில், கோபத்தின் உச்சிக்கே சென்று, பதவி வெறியில் தங்களது பேராசைகள் எல்லாம் நிராசை ஆகிவிடுமோ என்ற பயத்தில் அதிகார போதை கண்ணை மறைக்கும் அளவிற்கு தாங்கள் வகிக்கின்ற பதவியின் மாண்பையும் மறந்து. மனித நிலையிலிருந்து மாறி காட்டு மிருகங்கள் போல கடும் கூச்சலிட்டு வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கும் ஒரு சில அற்பப் பிறவிகளைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது
பதவி வெறி படுத்தும் பாடு எப்படியெல்லாம் இவர்களைப் பேச வைக்கிறது. தங்கள் வாயாலேயே தாங்கள் அடிமைகளாக இருந்தோம் என அவர்களை அவர்களாகவே தரம் தாழ்த்திக்கொள்வது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது வாழ்க வசவாளர்கள் என பதிலடி கொடுத்துள்ளார்.