ஜெயலலிதா அவர்களின் மீதான அரசியல் வெறுப்புணர்வால், ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம்.! டிடிவி தினகரன் வேண்டுகோள்.!



ttv-dhinakaran-talk-about-dmk-LFY6SL

தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர். என். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியது. அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

அப்போது அம்மா உணவகத்தை மூட திமுக அரசு முயற்சிக்கிறது. ஒருவேளை மூடினால் அதற்கான தண்டனையை அனுபவிப்பீர் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன், அம்மா உணவகத்தை மூடினால் என்ன ? கலைஞர் பெயர் உள்ள எத்தனை திட்டங்களை மூடி உள்ளீர்கள் நீங்கள்  என கேள்வி எழுப்பினார்.

இந்தநிலையில், அமைச்சரின் பேச்சுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடரபாக டிடிவி தினகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில், அம்மா உணவகங்களை மூடினால் என்ன?’ என்று சட்டப்பேரவையிலேயே தி.மு.க.வின் மூத்த அமைச்சர் பேசியிருப்பது அக்கட்சியின் அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது. 

இதன்மூலம், ‘அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்’ என முதலமைச்சர் திரு.ஸ்டாலின் முன்பு கூறியிருந்தது வெறும் வெளிவேஷம் என்பது அம்பலமாகியிருக்கிறது. வழிவழியாக வரும் தி.மு.க.வின் மக்கள் விரோத செயல்பாடுகளின் தொடர்ச்சிதான் அமைச்சரின் இந்தப் பேச்சு. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மீதான அரசியல் வெறுப்புணர்வால், அம்மா உணவகங்களை மூடி அவற்றால் பசியாறும் ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம் என தி.மு.க. அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.