1.50 இலட்சம் நாமம்.. போலி ஆணையுடன் வந்த வாலிபருக்கு என்ன நடந்தது தெரியுமா?..!
போலி பணி நியமன ஆணையுடன் வந்த இளைஞரால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, களையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பணி நியமன ஆணையுடன் வந்துள்ளார். அங்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் பணிக்கு வந்திருப்பதாகக் கூறிய நிலையில், அவர் சான்றிதழை வாங்கி சரிபார்த்த போது, அது போலியானது என்பதை உறுதி செய்துள்ளார்.
இதனையடுத்து, ஆட்சியரின் உதவியாளர் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே, காவல்துறையினர் இளைஞரிடம் நடத்திய விசாரணையில், சென்னை மறைமலை நகர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியது தெரியவந்தது.
செஞ்சியை சேர்ந்த குமரேசனிடம் ரூபாய் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் பணம் வாங்கி போலி பணி நியமன ஆணையை வீட்டிற்கு தபால் மூலமாக அனுப்பி வைத்ததும் உறுதியானது. இதனையடுத்து, குமரேசன் வழங்கிய புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், ஏழுமலையை தேடி வருகின்றனர்.