2018 ஆசிய கோப்பையின் உண்மையான சாம்பியன் ஆப்கானிஸ்தான் தான்; குவியும் பாராட்டு மழை!!



the-real-champion-of-asia-cup-2018

1984 முதல் நடைபெற்று வரும் ஆசிய கோப்பைக்கான 14ஆவது ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் அணிகள் பங்கேற்றன. 

இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றன.

Asia cup 2018

இந்தத் தொடரில் கத்துக்குட்டி அணியாக களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி இந்த தொடரில் ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. இதனால் ஆப்கானிஸ்தான் அணி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டது. மேலும் அந்த அணியின் திறமையை பல்வேறு தரப்புகளிலிருந்தும் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்தத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி ஆடிய முதல் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகவும் சிறப்பாக ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இந்தத் தோல்வியால் இலங்கை அணி இந்த தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது ஐந்து முறை ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் பெற்ற இலங்கை அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது.

Asia cup 2018

முதல் போட்டியில் இலங்கையை அபாரமாக வென்ற உத்வேகத்துடன் இரண்டாவது ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொண்டது ஆப்கானிஸ்தான் அணி. இந்த ஆட்டத்திலும் மிகவும் சிறப்பாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தை 136 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இமாலய வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் போர் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது.

சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டது ஆப்கானிஸ்தான்  அணி. இந்த போட்டியை கண்டிப்பாக பாகிஸ்தான் வீரர்களாலும் ரசிகர்களாலும் மறக்கவே முடியாது. ஏனெனில் அப்படிப்பட்ட பயத்தை உருவாக்கியது ஆப்கானிஸ்தான் அணி. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி ஓவர் வரை திக் திக் என அனைவரையும் பயமுறுத்தி மிரட்டியது ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு.

Asia cup 2018

சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்கொண்டது ஆப்கானிஸ்தான். இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த போட்டியும் இறுதி ஓவர் வரை மிகவும் பரபரப்புடன் இருந்தது. இறுதி ஓவரில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ரஷீத் கான் அவுட்டாகி வெளியேற வங்கதேசம் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Asia cup 2018

இந்த இரண்டு ஆட்டங்களில் கடைசி ஓவர் வரை சென்று வெற்றியை பறிகொடுத்த ஆப்கானிஸ்தான் அணி இந்த தொடரில் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்கொண்டது ஆப்கானிஸ்தான். இந்த ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்து அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷாசாத் இந்திய பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்க ஆரம்பித்தார். 7 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகளை விளாசிய ஷாசாத் 116 பந்துகளில் 127 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சிறப்பான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்.

Asia cup 2018

இந்தப் போட்டியிலும் சிறப்பான பந்து வீச்சு வெளிப்படுத்தியது ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் இந்திய அணியை அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கச் செய்தது. இருப்பினும் ரன்கள் சமநிலையில் இருந்ததால் இந்த ஆட்டம் டையில் முடிந்தது. 

Asia cup 2018

உண்மையில் சொல்லப்போனால் இந்தத் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அனைத்து தகுதிகளும் ஆப்கானிஸ்தான் அணிக்கு இருக்கிறது.