எம்.ஜி.ஆரால் பொருளாதாரரீதியாக வீழ்ந்த கண்ணதாசன்.!
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், ஒரு காலத்தில் தயாரிப்பாளர், இயக்குனர், கவிஞர், எழுத்தாளர் என்று பன்முக தன்மையோடு, பரபரப்பாக வலம் வந்தவர் கண்ணதாசன். எம்.ஜி.ஆருடன் மிக நெருங்கிய நட்பில் இருந்தாலும் ,அவர் கடனாளியாக எம்.ஜி.ஆர் தான் முக்கிய காரணம் என்று தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.
சினிமாவில் பரபரப்பாக இருந்து வந்த கண்ணதாசன், பின்பு அரசியலில் இறங்கி, தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்ததால், பொருளாதார ரீதியாக மிகப்பெரிய சரிவை சந்தித்தார். அதன் பிறகு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, சினிமா தயாரிப்பாளர் ஒருவர் படத்தை தயாரியுங்கள், நான் உங்களுக்கு உதவி புரிகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
அவர் இப்படி தெரிவித்ததால், உற்சாகமடைந்த கண்ணதாசன், தானே ஒரு பட தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். பின்பு கண்ணதாசனுக்கு உதவி புரிவதாக தெரிவித்த அந்த சினிமா பைனான்சியர் எம்.ஜி.ஆரை வைத்து படமெடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறியதால், கண்ணதாசன் எம்.ஜி.ஆரிடம் இதுபற்றி பேசினார். அப்போது இந்த திரைப்படத்திற்கு நான் 3 மாதங்கள் கால் சீட் தருகின்றேன் என்று எம்ஜிஆரும் ஒப்புக்கொண்டார். அதன் பின் கண்ணதாசன் அந்த திரைப்படத்தை எடுப்பதற்கான அனைத்து பணிகளையும் ஆரம்பித்தார்.
ஊமையன் கோட்டை என்று பெயரிடப்பட்ட அந்த திரைப்படத்தின் கதையை எம்ஜிஆருக்காக தயாரித்து, படமாக்க முடிவு செய்த கண்ணதாசன், அந்த படத்திற்கு பூஜையும் போட்டார். மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெற்ற இந்த திரைப்பட பூஜையில், எம்.ஜி.ஆர், இந்த படம் என்னுடைய சொந்த படத்தை போன்ற படம். ஆகையால் நிச்சயம் நான் சிறப்பாக செயல்படுவேன் என தெரிவித்தார். இதனால், விநியோகஸ்தர்கள் பணத்தை வாரி இறைக்க தொடங்கினார்கள்.
பின்பு இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கிய கண்ணதாசன், சுமார் 3 000 அடிக்கு மேல் படப்பிடிப்பை செய்து முடித்தார். அதன் பிறகு எம்ஜிஆர் படப்பிடிப்புக்கு வரவில்லை, ஆகவே படப்பிடிப்பு தாமதமானது. பின்னர் படத்திற்கு நிதியுதவி செய்து வந்த அந்த சினிமா பைனான்சியர், நீதிமன்றத்தில் புகாரளித்ததால், கண்ணதாசன் உடனடியாக இந்த படப்பிடிப்பை நிறுத்தினார்.
இந்த விவகாரம் எம்ஜிஆர் கவனத்திற்கு சென்றதால், பின்பு அவரே 10 தினங்களில் படப்பிடிப்பை ஆரம்பிப்பியுங்கள், நான் கால்ஷீட் வழங்குகிறேன் என கண்ணதாசனுக்கு தகவல் சொல்ல, கண்ணதாசன் நேரடியாகவே எம்ஜிஆருடன் பேச்சுவார்த்தை நடத்த சென்றார். ஆனால் பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எடுக்கப்படவில்லை. பின்னர் எம்.ஜி.ஆர் வீட்டை விட்டு வெளியே வந்த கண்ணதாசன் நிஜ வாழ்வில் நண்பர்களாக இருப்பவர்கள் சினிமாவிலும் நண்பர்களாக இருப்பார்கள் என்று நினைத்தது என் தவறு தான் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்று போனதால், கண்ணதாசன் மிகப்பெரிய பொருளாதார சரிவை சந்தித்துள்ளார். அதன் பிறகு அந்த சரிவிலிருந்து மெல்ல, மெல்ல மீண்டார். அதன் பிறகான காலகட்டத்தில், கண்ணதாசன், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட இருவரும் ஒன்றிணைந்து மேடைகளில் இருவரும் புகழ்ந்து கொண்ட நிகழ்வும், ஒருவரை ஒருவர் அரசியல் ரீதியாக விமர்சனம் செய்து கொண்ட நிகழ்வு நடந்தது தனி கதை.அதேபோல எம்.ஜி.ஆர் முதலமைச்சராக பதவியேற்றபோது கண்ணதாசனை அரசவை கவிஞராக நியமனம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.