11 வயது மகளை காப்பாற்ற காட்டுப்பன்றியுடன் சண்டையிட்டு உயிரிழந்த தாய் ... கலங்க வைக்கும் சோக சம்பவம்..!



A mother died after fighting with a wild boar to save her 11-year-old daughter... a disturbing incident..

சத்தீஸ்கர் மாநிலம் கொர்பா மாவட்டம் டிலியமர் கிராமத்தில் வசிப்பவர் துவசியா பைய் (45). இவரது மகள் ரிங்கி (11). துவசியா தனது மகள் ரிங்கியை அழைத்துக்கொண்டு விவசாய வேலை செய்வதற்காக, கிராமத்தில் இருக்கும் தோட்டத்திற்கு சென்றுள்ளார். 

துவசியா தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, தோட்டத்தில் மறைந்திருந்த காட்டுப்பன்றி ஒன்று அங்கு அமர்ந்திருந்த ரிங்கியை நோக்கி வேகமாக ஓடி வந்தது. இதை பார்த்த துவசியா தனது மகளை காட்டுப்பன்றியிடமிருந்து காப்பாற்ற முயன்றார். 

அப்போது அவர் கையில் வைத்திருந்த மண் வெட்டியால் காட்டுப்பன்றியை தாக்கினார். அப்போது, காட்டுப்பன்றி துவசியாவை கொடூரமாக தாக்கியது. அப்போதும் அவர் காட்டுப்பன்றியிடம் இருந்து தன் மகளை காப்பாற்றினார்.

துவசியா தனது மகளை அங்கிருந்து ஓடிவிடும்படி கூறினார். ரிங்கி அங்கிருந்து ஓடி சென்று கிராமத்தினரிடம் கூறியதை தொடர்ந்து, வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த தோட்டத்திற்கு கிராமத்தினரும், வனத்துறையினரும் விரைந்து சென்றனர். 

அப்போது, துவசியா காட்டுப்பன்றியை கொன்றிருந்தார். ஆனால், காட்டுப்பன்றி தாக்கியதில் முகம் மற்றும் உடல் பாகங்களில் படுகாயமடைந்த நிலையில் துவசியாவும் உயிரிழந்து கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வனத்துறையினர், துவசியாவின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.