வெளிமாநில தொழிலாளர்கள் நடந்து செல்வதை அனுமதிக்க கூடாது! மத்திய அரசு கடிதம்!
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸானது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதனால் நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை மூன்றாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில், சமீபத்தில் மகாராஷ்டிராவில் இருந்து சொந்த மாநிலமான மத்திய பிரதேசத்துக்கு நடந்து சென்ற தொழிலாளர்கள் 16 பேர் ஓய்வு எடுப்பதற்காக தண்டவாளத்தில் படுத்து தூங்கிய போது, சரக்கு ரெயில் ஏறியதில் பலி ஆனார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஊரடங்கின் காரணமாக போக்குவரத்து வசதி இல்லாததால் பல இடங்களில் இதேபோல் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்கிறார்கள்.
இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், வெளிமாநிலத்திற்கு சென்ற தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்குச் செல்லத் தொடர்ந்து சாலையில் நடப்பதையும், ரயில்வே இருப்புப்பாதையில் நடந்து செல்வதையும் பார்க்கும்போது பெரும் கவலையளிக்கிறது, அவர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்களை அதிகமாகப் பயன்படுத்த மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அவர்கள் அவ்வாறு சாலை வழியாகவோ, தண்டவாளம் வழியாகவோ செல்ல அனுமதிக்கக்கூடாது. அப்படி சென்றால் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அவர்களை தடுத்து நிறுத்தி உரிய ஆலோசனை வழங்கி அருகில் உள்ள முகாம்களில் தங்க வைத்து, சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் வரை அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.