7 லட்சம் தொலைந்ததால் விமானத்தை விட்ட வெளிநாட்டு பயணி; தேடி வந்து கொடுத்த டாக்சி டிரைவருக்கு குவியும் பாராட்டு
தாய்லாந்து விமான நிலையத்தில் தவறுதலாக டாக்ஸியில் விட்டுச் சென்ற பத்தாயிரம் டாலர் பணத்தை டாக்சி டிரைவர் போலீஸ் உதவியுடன் வெளிநாட்டு பயணியிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த ஜெர்ரி ஹாட் என்பவர் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா வந்துள்ளார். 67 வயதான ஜெர்ரி தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சில தினங்களுக்கு முன்பு பாங்காக்கில் உள்ள சுவர்ண பூமி விமான நிலையத்திலிருந்து தன் சொந்த நாட்டிற்கு புறப்பட தயாரானார். அப்போது அவரை விமான நிலையத்தில் இறக்கிவிட வீரபோல் என்ற டாக்ஸி டிரைவர் வந்திருந்தார்.
ஜெர்ரியை சுவர்ணபூமி விமான நிலையத்தில் இறக்கிவிட்ட வீரபோல் அங்கிருந்து கிளம்பிவிட்டார். விமான நிலையத்திற்குள் சென்று தன்னுடைய பொருட்களை சரிபார்த்த ஜெர்ரிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் வைத்திருந்த பத்தாயிரம் டாலர் பணம் காணாமல் போய்விட்டது. இதனால் மிகவும் கலக்கமடைந்த ஜெர்ரி விமானத்தில் செல்லாமல் அங்கேயே இருந்துவிட்டார்.
சில மணி நேரங்களுக்கு பிறகு தன்னுடைய டாக்ஸியை சுத்தம் செய்த வீரபோல், டாக்சியில் பத்தாயிரம் டாலர் பணம் கிடப்பதை பார்த்துள்ளார். இந்த பணம் ஜெர்ரியுடைய பணமாக தான் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்த டாக்சி டிரைவர் உடனடியாக விமான நிலையத்திற்கு விரைந்தார். அங்கு விமான நிலைய போலீசாரை சந்தித்த டிரைவர் நடந்தவற்றை கூறி தன் டாக்ஸியில் கடந்த பத்தாயிரம் டாலர் பணத்தை அவர்களிடம் ஒப்படைத்தார். அவர்கள் விமான நிலையத்தில் காத்திருந்த ஜெர்ரியை தொடர்பு கொண்டு அவருடைய பணத்தை அவரிடமே ஒப்படைத்தனர்.
காணாமல்போன தனது பணத்தை பெற்றுக்கொண்ட ஜெர்ரி அதை பற்றி கூறியதாவது, "காணாமல் போன எனது பணம் திரும்ப கிடைக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இப்பொழுது மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. என்னுடைய பணத்தை திரும்ப கொடுத்த அந்த நேர்மையான டாக்சி டிரைவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் விடுமுறைக்காக தாய்லாந்திற்கு வந்திருந்தேன். ஆனால் இப்பொழுது என்னுடைய பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் நிரந்தரமாக தாய்லாந்தில் வந்து குடியேற வேண்டும் என்று தோன்றுகின்றது. நான் நிச்சயம் மீண்டும் தாய்லாந்திற்கு வருவேன்" என கூறினார்