எடப்பாடி பழனிசாமியை சந்திப்பாரா பிரதமர் மோடி?!: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தம்பிதுரையுடன் சந்திப்பு..!



Will PM Modi meet Edappadi Palaniswami in Chennai?

சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவுக்கு வருகைதரும் பிரதமர் மோடி, அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளராக அண்மையில் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமியை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவில்  பங்கேற்க அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி புறப்பட்டுசென்றார். டெல்லியில் அவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.

இதற்காக முன்கூட்டியே தனக்கு நேரம் ஒதுக்குமாறு எடப்பாடி பழனிசாமி கேட்டதாக கூறப்பட்டது. ஆனால் யாரையும் சந்திக்காமல் அவர் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார். பிரதமர் மோடி, எடப்பாடி பழனிச்சாமியை பார்க்க நேரம் ஒதுக்காத நிலையில் அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பி. தம்பித்துரை பிரதமரை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான திரெளபதி முர்மு வெற்றி பெற்றதற்கு மாநிலங்களவை உறுப்பினரான தம்பித்துரை மோடியிடம் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. அ.தி.மு.க வில் தற்போது உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

அ.தி.மு.கவின் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதை தவிர்த்த பிரதமர் மோடி எடப்பாடி அணியை சேர்ந்த தம்பித்துரையை மட்டும் பார்த்தது ஏன்? என பல்வேறு யூகங்கள் எழுந்துள்ள நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவிற்கு சென்னை செல்லும் போது எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க நேரம் ஒதுக்கும் படி தம்பிதுரை மோடியிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.