ருத்ர தாண்டவம் ஆடிய டேவிட் மில்லர்: விடாமல் போராடிய இந்தியா!,.. டி-20 தொடரை கைப்பற்றி அசத்தல்..!
இந்திய அணி சொந்த மண்ணில் தென்னப்பிரிக்க அணிக்கு எதிரான டி-20 தொடரை முதன் முறையாக கைப்பற்றியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று டி-20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் நடந்த முதலாவது டி-20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இதனைத் தொடர்ந்து, நேற்று 2 வது டி-20 போட்டி அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தியில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச தீர்மானித்தது. இதன்படி ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு கே.எல்.ராகுல்-ரோஹித் சர்மா ஜோடி தொடக்கம் அளித்தது. அதிரடியாக தொடங்கிய இந்த ஜோடி 94 ரன்கள் குவித்த பின்பு பிரிந்தது.
ரோஹித் சர்மா (47), கே.எல்.ராகுல் (57) ரன்கள் குவித்து கேசவ் மகராஜ் சுழலில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கோலி-சூர்ய குமார் யாதவ் ஜோடி மைதானத்தின் 4 திசைகளிலும் பந்தை விரட்டி ரன் வேகத்தை மேலும் கூட்டியது. இவர்களின் அதிரடியால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 237 ரன்கள் குவித்தது. சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்கு இது 3 வது அதிகபட்ச ஸ்கோராக இது பதிவானது.
238 ரன்கள் இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்க அணி தொடக்கத்தில் பவுமா (0), ரூசோவ் (0) விரைவிலேயே விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். பின்னர் களமிறங்கிய எய்டன் மார்க்ரம், டி காக் உடன் இணைந்து அதிரடியாக விளையாடினார். 33 ரன்களில் மார்க்ரம் ஆட்டமிழக்க அவரையடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர் ருத்ர தாண்டவம் ஆடி மிரட்டினார்.
20 ஓவர்களின் முடிவில், அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.