இரவோடு இரவாக பறந்த உத்தரவு: டாஸ்மாக் கடைகளுக்கு லீவு! அதிர்ச்சியில் உறைந்த குடிமகன்கள்!!.



Overnight order: Leave for Tasmac shops! Citizens frozen in shock.

நாளை நடக்கவுள்ள பா.ம.க.வின் முழு அடைப்பு போராட்டத்தை எதிர்கொள்ளும் விதமாக டி.ஐ.ஜி. பாண்டியன் தலைமையில் வடலூரில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக, வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்தி இருந்தது. 

கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர். அப்போது சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக என்.எல்.சி. நிர்வாகம் உறுதி அளித்து நடந்த பேச்சுவார்த்தையில் சிலருக்கு உடன்பாடு ஏற்படவில்லை. 

இந்த நிலையில் நேற்று, என்.எல்.சி. நிறுவனம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிலத்தை கையகப்படுத்தி இருந்த வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி போன்ற பகுதிகளில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் எல்லை வரையறை செய்தனர். மேலும் விவசாய நிலத்தை நவீன எந்திரங்கள் உதவியுடன் சமன் செய்யும் பணியும் நடந்தது. 

இதை கண்டித்து பா.ம.க.வினர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். இதை தொடர்ந்து 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை பறித்து சொந்த மண்ணில் மக்களை அகதிகளாக்கும் என்.எல்.சி. நிர்வாகத்தின் போக்கை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் 11-ஆம் தேதி மாபெரும் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார். 

இந்த முழு அடைப்பு போராட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியினரின் முழு அடைப்பு போராட்டத்தை எதிர்கொள்ளும் விதமாக டி.ஐ.ஜி. பாண்டியன் தலைமையில்  ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜராம் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் வழக்கம்போல வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் இயங்கும். பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் சகஜ நிலையை நீடிக்கும் என்று கூறினார். மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியனும் நாளை கடைகள் வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.