வானத்தைப் போல பரந்த மனது, புலன் விசாரணை செய்தாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் சகாப்தம்! கேப்டனை வாழ்த்திய தமிழிசை!



tamilisai soundararajan wishes to vijayakanth

நடிகர் விஜயகாந்த் திரை வாழ்க்கையில் ரசிகர்கள் வியக்கும் அளவிற்கு நடித்து கேப்டன் என தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். காவல்துறை அதிகாரியாக நடித்து இளைஞர்களின் மனதில் இடம்பிடித்த விஜயகாந்த் வானத்தைப்போல, மரியாதை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பெண்களையும் கவர்ந்தார். 

சமூக அக்கறை, அரசியல் மாற்றம், தேசப்பற்று என தனது கொள்கைகளை திரைப்படங்களில் தொடர்ந்து சொல்லி அதன்மூலம் அரசியலிலும் நுழைந்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் தான் விஜயகாந்த். அவர் மனதில் தோன்றுவதை எல்லா இடங்களிலும் வெளிப்படையாக பேசுபவர். இதனால் பலருக்கும் இவரை பிடிக்கும்.

கேப்டன் விஜயகாந்த் ஆகஸ்டு 25 ஆம் தேதியான இன்று தனது 68-வது பிறந்த நாளை கொண்டாடுவதையொட்டி தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விஜயகாந்திற்கு பிறந்த நாள் வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளார்.


அதில், ''வானத்தைப் போல" பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், "மரியாதை"யையும் பெற்று "புலன் விசாரணை" செய்தாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் "சகாப்தமாக" "கேப்டனாக" "மரியாதை"யுடன் "நெறஞ்ச மனசு"டன் வலம் வந்து கொண்டிருக்கும் அண்ணன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்'' என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விஜயகாந்திற்கு பிறந்த நாள் வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளார். மேலும் விஜயகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.