"என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை எட்டிப் பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை" - நடிகை ஆலியா பட்!
பாலிவுட்டில் அறிமுகமான ஆலியா பட் 2012 ஆம் ஆண்டு கரண் ஜோஹர் இயக்கிய 'ஸ்டுடென்ட் ஆப் தி இயர்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக பாலிவுட்டில் அறிமுகமானார். 'ஹை வே' மற்றும் 'உத்தா பஞ்சாப்' போன்ற திரைப்படங்களில் நடித்ததற்காக 'ஃபிலிம் ஃபேர்' விருதுகளை பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'கங்குபாய் கத்தியவாடி' என்ற திரைப்படம் சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இவரும் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும் காதலித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஆலியா பட் பாலிவுட்டின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான மகேஷ் பட் மற்றும் நடிகை சோனி ரஸ்தான் ஆகியோரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவரது புகைப்படம் ஒன்று சர்ச்சையாகி இருக்கிறது. இது தொடர்பாக அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிந்துள்ள ஆலியா பட் பத்திரிக்கையாளர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த சில பத்திரிகையாளர்கள் ஆலியா பட் அவரது வீட்டில் இருக்கும் புகைப்படங்களை எடுத்து செய்திகளாக பகிர்ந்து இருக்கின்றனர். இச்சம்பவம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்துள்ள ஆலியா பட் பத்திரிகையாளர்களை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஊடுருவி பார்ப்பதற்கு யாருக்கும் அனுமதி இல்லை என்று காட்டமாக தெரிவித்து இருக்கிறார் ஆலியா பட்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள செய்தியில் "நான் என்னுடைய வீட்டின் அறையில் அமர்ந்து சாதாரணமாக பொழுதை கழித்துக் கொண்டிருந்தேன். அப்போது யாரோ என்னை பார்ப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்படவே நான் திரும்பி பார்த்தபோது எனது பக்கத்து வீட்டின் மாடியிலிருந்து இரண்டு நபர்கள் புகைப்படம் எடுப்பதை கவனித்தேன். இது மிகவும் மோசமான செயல். ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஊடுருவி பார்ப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. எந்த ஒரு விஷயத்திலும் எல்லையை மீறாதீர்கள்" என பதிவிட்டுள்ள அவர் மும்பை போலீசையும் அந்தப் பதிவில் டேக் செய்திருக்கிறார்.