சொந்த மாவட்டத்திற்காக இரவு-பகலாக மீட்பு பணிகளில் ஈடுபடும் இயக்குனர் மாரி செல்வராஜ்: குவியும் பாராட்டுக்கள்.!



DIrector Mari Selvaraj in Tirunelveli Help To Rescue Peoples 

 

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் மாரி செல்வராஜ். இவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். தமிழில் தங்கமீன்கள், தரமணி ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர், 2021ல் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். 

இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியிருந்தார். விரைவில் வாழை திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தற்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பெய்ததை போல, கனமழை பெய்துள்ளது. 

இதனால் அம்மாவட்டங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கி இருக்கின்றன. மக்களை மீட்க தேசிய, மாநில மீட்பு படையினர் களமிறங்கியுள்ளனர். அம்மாவட்டத்தை சேர்ந்த இயக்குனர் மாரி செல்வராஜும், மாவட்ட மக்களை அரசு விரைந்து காப்பாற்றக்கோரிக்கை வைத்திருந்தனர். 

அதோடு மட்டுமல்லாமல், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை விரையும் செய்தியை கேட்ட மாரி செல்வராஜ், தனது மாவட்ட மக்களை மீட்க சொந்த ஊருக்கு அமைச்சருடன் விரைந்து புறப்பட்டார். முதலில் அமைச்சருடன் பயணித்தவர், அதனைத்தொடர்ந்து தனது கிராம மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டார். 

பின், வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் தொடர்ந்து இரவு-பகலாக ஈடுபட்டு வருகிறார். இயக்குனர் மாரியின் செயல் பலதரப்பில் தொடர்ந்து பாராட்டுகளை பெற்று வருகிறது. தனது ஊருக்கு ஒரு பிரச்சனை என்றதும், உணர்வுடன் ஓடோடிவந்து மீட்பு பணிகளில் உதவிகளை மேற்கொண்ட இயக்குனரின் செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.