கொரோனா அவலங்கள்! ஒருவேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் தொழிலாளர்கள்! பெப்சி தலைவர் விடுத்த கோரிக்கை!



fefsi-leader-request-to-actor-actress

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்தியாவிலும் கொரோனா வைரஸால் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளது. ரயில்கள், பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் தினக்கூலி வாங்கி வரும் சினிமா தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு நேர சாப்பாட்டிற்கே வழியில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவரான  ஆர்.கே.செல்வமணி நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் சினிமா தொழிலாளர்கள் பல்வேறுவிதமான வேலை நிறுத்தங்களை சந்தித்துள்ளனர். 

Fefsi

ஆனால், தற்போது நடக்கும் வேலை நிறுத்தம் முற்றிலும் வேறானது. சமூகத்திற்காகவும், தேசத்திற்காகவும் தங்களை தாங்களே முடக்கிக் கொண்டுள்ளனர். இந்த முடக்கம் தொழிலாளர்களை பெருமளவில் பாதித்துள்ளது.

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தில்  உள்ள 25 ஆயிரம் உறுப்பினர்களில், ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் தினசரி வேலைக்கு சென்று வாழ்க்கையை நடத்துபவர்கள். இந்நிலையில் இன்று காலை லைட்மேன் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் எனக்கு போன் செய்து, சாப்பாடு இல்லாமல் குழந்தைகள் சாவதைவிட, நான் கொரோனாவால்  செத்தாலும் பரவாயில்லை என வேதனையுடன் கூறினார். அதனை  வார்த்தைகளால் எழுத முடியாது.

நமது சம்மேளனத்தில்‌ உறுப்பினராக உள்ள 25 ஆயிரம்‌ உறுப்பினர்களில்‌ ஒரு வேலை சாப்பாட்டிற்காக கஷ்டப்படும்‌ தொழிலாளர்கள்‌ 15 ஆயிரம் பேர்‌ உள்ளனர். இந்நிலையில் ஒரு குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி கொடுத்தால் அவர்கள்‌ கஞ்சி சோறாவது சாப்பிட்டு உயிர்‌ வாழ முடியும். ஒரு மூட்டை அரிசி 1250 ரூபாய்‌ எனக் கணக்கு வைத்தால்‌ மொத்தமாக 2 கோடி ரூபாய்‌ ஆகிறது. எனவே கருணை உள்ளம்‌ படைத்தவர்கள் தயவுசெய்து  உங்களோடு பணிபுரிந்து, உங்களோடு வாழ்ந்து வருகின்ற குடும்பங்களுக்கு உணவு அளிப்பீர்‌, வாழ்வு அளிப்பீர்‌, நிதி அளிப்பீர்‌ என அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறோம்‌ என குறிப்பிட்டுள்ளார்.