தன்னை கொல்ல 30 பேருடன் வந்த பஞ்சாயத்து தலைவர் தம்பியை, ஆசிட் வீசி, பெட்ரோல் ஊற்றி எரித்து கரிக்கட்டையாக்கிய விவசாயி.!



Andra Pradesh Kurnool 2 Killed by Farmer due to Land Dispute Using Acid Attack Burned Petrol

30 பேருடன் நிலப்பிரச்சனையில் தன்னை கொலை செய்ய வந்த பஞ்சாயத்து தலைவரின் தம்பியை விவசாயி ஆசிட் வீசி தாக்குதல் நடத்தி, பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கர்னூல் மாவட்டம், மந்த்ராலயம் காமவரம் கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜுனா. இவர் விவசாயியாக இருந்து வருகிறார். இதே கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவரின் தம்பி சிவப்பா. மல்லிகார்ஜுனாவுக்கு சொந்தமாக 7 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலத்திற்கு அருகேயே அரசு புறம்போக்கு நிலத்திலும் மல்லிகார்ஜுனா விவசாயம் செய்து வந்துள்ளார். 

இந்நிலையில், பஞ்சாயத்து தலைவரின் தம்பியாக சிவப்பா இருப்பதால், அரசு புறம்போக்கு நிலத்தை தன்னிடம் கொடுக்க வேண்டும் என மல்லிகார்ஜுனாவிடம் சிவப்பா தகராறு செய்து வந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக ஊர் பஞ்சாயத்து கூட்டி தீர்வு காணும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

கூட்டம் பாதியில் நிறைவு பெற்று அனைவரும் வீட்டிற்கு சென்ற நிலையில், சிவப்பா தனது உறவினர்கள் மற்றும் அடியாட்கள் 30 பேருடன் பயங்கர ஆயுதத்துடன் மல்லிகார்ஜுனா வீட்டிற்கு சென்று இருக்கிறார். இந்த தகவலை அறிந்த மல்லிகார்ஜுனா விவசாய நிலத்திற்கு தெளிக்கும் பூச்சி மருந்து இயந்திரத்தில் ஆசிட்டை ஊற்றி நிரப்பியுள்ளார். 

Andra Pradesh

எதிராளிகளை சமாளிக்க தனது உறவினர்களான ராஜி, ராமஞ்சி, ஈஸ்வர், கோபால் மற்றும் அவரின் மனைவியுடன் தயாராக இருந்த நிலையில், சிவப்பா தனது அடியாட்களுடன் மல்லிகார்ஜுனா வீட்டிற்கு முன்பு வந்ததும், ஆசிட் நிரப்பி வைத்திருந்த மருந்து தெளிக்கும் இயந்திரம் மூலமாக சிவப்பாவின் அடியாட்கள் மீது ஆசிட் பீய்ச்சப்பட்டுள்ளது. 

உடலில் ஆசிட் பட்டு பயங்கர ஆயுதத்துடன் வந்தவர்கள் பயங்கர சத்தத்துடன் அலறிக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளார். ஆசிட் பட்டதில் சிவப்பா, பாஸ்கர், வீரண்ணா, சத்தியப்பா, பஜார்ப்பா ஆகியோர் கீழே விழுந்து அலறித்துடித்துள்ளனர். மாடியில் இருந்து இறங்கி வந்த மல்லிகார்ஜுனா மற்றும் அவரின் உறவினர்கள் சிவப்பா மற்றும் பாஸ்கரின் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் சிவப்பா, பாஸ்கர் தீயில் கருகி உயிரிழந்த நிலையில், மல்லிகார்ஜுனா மற்றும் அவரின் உறவினர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, அவர்கள் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். மேலும், தலைமறைவான நாகர்ஜூனாவின் குடும்பத்தினருக்கு வலைவீசப்பட்டுள்ளது.

இருதரப்பும் வெவ்வேறு கட்சி ஆதரவாளர்கள் என்பதால், அரசியல் மோதல் பரபரப்பும் அங்கு நிலவி வருகிறது. இதனால் பாதுகாப்பு கருதி கூடுதல் காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு, கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.