அசத்தலோ அசத்தல்.. பெண்களின் திருமண வயது இனி 21.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.!
பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதானது 18 வயதில் இருந்து 21 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
குழந்தை திருமண சட்டம் 2006 மற்றும் சிறப்பு அல்லது இந்து திருமண சட்டம் 1955 இல் திருத்தங்கள் கொண்டு வந்து புதிய திருமண சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. நிதி ஆயோக் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவானது, இந்த விஷயம் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்து இருந்தது.
தற்போதைய சூழ்நிலையில் ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 ஆகவும், பெண்களுக்கு 18 வயதாகவும் இருக்கிறது. கடந்த வருட சுதந்திர தினத்தின் போது பேசிய பிரதமர் நரேந்திர மோடியும், பெண்களின் திருமண வயதை உயர்த்துவது தொடர்பாக பேசி இருந்தார்.
மேலும், மகள்கள் மற்றும் சகோதரிகளின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட அரசாக இவ்வரசு விளங்கும். ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மகளை காப்பாற்ற, அவர்களின் திருமண வயது சரியாக இருக்க வேண்டும் எனவும் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சரவை பெண்களின் திருமண வயது தொடர்பான சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதால், விரைவில் அறிவிப்பு கொடுக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.