தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 68 ஆக உயர்வு: வெளியான பகீர் தகவல்..!



Death toll rises to 68 in suspension bridge collapse

குஜராத் மாநிலம், மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றின் குறுக்கே ஏறத்தாழ 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.

100 ஆண்டுகல் பழமையான பாலத்தை சீரமைக்கும் பணி கடந்த 6 மாதங்களாக நடந்து வந்தது. பணிகள் அனைத்தும் முடிந்து பாலம் சீரமைக்கப்பட்டதை அடுத்து, குஜராத்தி புத்தாண்டு தினமான கடந்த 26 ஆம் தேதி அந்த பாலம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில், விடுமுறை தினமான நேற்று மாலை சுமார் 6 மணியளவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தின் மீது குவிந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் மீண்டும் திறக்கப்பட்ட தொங்கு பாலத்தை பார்வையிட திரண்டிருந்தனர். ஏராளமானோர் ஒரே நேரத்தில் குவிந்ததால் அவர்களது எடையை தாங்க முடியாமல், பாலம் திடீரென அறுந்து விழுந்தது.

இதனை தொடர்ந்து, பாலத்தில் நின்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றுக்குள் விழுந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப்படையினரும் , மாநில பேரிடர் மீட்புப்படையினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த நிலையில், சிலர் மீட்கப்பட்டதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா கூறினார்.

பாலம் அறுந்து விழுந்தபோது சுமார் 100 க்கும் மேற்பட்டோர் பாலத்தில் இருந்ததாகவும், ஆற்றில் விழுந்த அவர்களில் 40 பேர் வரை மீட்கப்பட்டுள்ளதாகவும்  அம்மாநில  டி.ஜி.பி. ஆசிஷ் பாட்டியா கூறினார். ஆற்றுக்குள் விழுந்தவர்களில் சுமார் 60 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், இந்த விபத்து குறித்து அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறுகையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளதாக வும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விரைவில் உயிரிழப்புகள் குறித்த சரியான எண்ணிக்கை கிடைக்கும் என்று கூறியுள்ளார்.