சொத்துக்களை எழுதி வாங்கி, தாயை தெருவில் விரட்டிய மகன்கள்.. திரைப்பட பாணியில், தாய் செய்த தரமான சம்பவம்..! 



Karnataka Haveri Son Cheat Mom about Land Document Mother Best Revenge

நூதன முறையில் சொத்துக்களை ஏமாற்றி வாங்கிய மகன்கள், தாயை நடுத்தெருவில் துரத்தி விட்டுள்ளனர். ஒரு வருடம் கழித்து போராடி, சட்டத்தின் உதவியுடன் தாய் சொத்துக்களை மீட்டெடுத்த சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவேரி மாவட்டம், வீரபுரா கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரின் மனைவி ப்ரேமவ்வா ஹலவண்ணர் (வயது 76). இவர்கள் இருவருக்கும் 2 மகள்கள், 2 மகன்கள் என 4 பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் நால்வருக்கும் திருமணம் முடிந்து, அவரவர் குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றனர். கடந்த சில வருடத்திற்கு முன்னதாக ஸ்ரீகாந்த் உயிரிழந்துவிட்ட நிலையில், ப்ரேமவ்வா தனியாக வசித்து வந்துள்ளார். 

இதனிடையே, தாயை யார் பராமரிப்பது? என்ற கேள்வி குடும்பத்தில் எழுந்துகொள்ள, அவரின் 2 மகன்களான தனிகுமார் மற்றும் சந்தோஷ் ப்ரேமவ்வாவை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். தாயிடம் அன்பாக இருப்பது போல நடித்த இருவரும், தாயாருக்கு தெரியாமலேயே அவரின் பெயரில் இருந்த 3 ஏக்கர் 32 சென்ட் நிலத்தை நூதன முறையில் தங்களின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளனர். 

மேலும், அவரின் பெயரில் இருந்த 2 வீடுகளையும் தங்களது பெயருக்கு மாற்றிக்கொண்ட நிலையில், இதனையறிந்த ப்ரேமவ்வா ஆவேசமடைந்த கேள்விகளை எழுப்பியுள்ளார். சொத்துக்களை பெற்றுக்கொண்ட மகன்கள், தாயை கவனிக்காமல் வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளனர். இதனால் ஆதரவின்றி தவித்த ப்ரேமவ்வா, கிராம மக்கள் உதவியுடன் ஹாவேரி நகர் அமைதி மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். 

karnataka

ஆதரவற்றோருக்கான அமைதி மையத்தில் ப்ரேமவ்வா ஒரு வருடத்திற்கும் மேல் வசித்து வந்த நிலையில், மகன்களுக்கு பாடம் புகட்ட தாய் நினைத்துள்ளார். இதனையடுத்து, அவர் தங்கியிருந்த மையம் மூலமாக சாவனூர் துணைமண்டல அதிகாரியிடம் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி, தாசில்தார் முன்னிலையில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. 

இந்த சொத்துக்கள் அனைத்தும் ப்ரேமவ்வாவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தனக்கு சொத்துக்கள் கிடைத்த மகிழ்ச்சியை விட, மகன்கள் தன்னை இறுதி காலத்தில் கவனிக்கவில்லை என்று கூறி கதறி அழுதுள்ளார். தனக்கு நீதிபெற்றுத்தந்த அதிகாரிகளுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த ப்ரேமவ்வா, தனது சொந்த வீட்டிற்கு சென்றார். 

கடந்த 1994 ஆம் வருடம் வெளியான வாட்ச்மேன் வடிவேலு என்ற திரைப்படத்தின் நகல் போல இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.