பணத்திற்கு ஆசைப்பட்டு இரட்டை கொலை.... கொலையாளி சிக்கியது எப்படி.?
கர்நாடக மாநிலத்தில் இரட்டை கொலை தொடர்பாக 26 வயதை இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தொழிற்சாலையில் வேலை செய்த காவலர் மற்றும் மற்றொருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்திருக்கின்றனர்.
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் ஹன்சூர் பகுதியில் அமைந்துள்ள அரவையும் மில்லில் தான் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. இந்த அரவை மில்லில் காவலராக பணிபுரிந்த வெங்கடேஷ் என்ற 75 வயது முதியவரும் சண்முகா என்ற 65 வயது நபரும் போர்வையால் மூடி இரும்பு தடியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கொலையாளி முகத்தை மூடி இருந்ததால் அடையாளம் காண்பதில் காவல்துறைக்கு சிக்கல் நீடித்து வந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மோப்ப நாயை வரவழைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மோப்ப நாய் அதே பகுதியைச் சார்ந்த 26 வயது அபிஷேக் என்ற இளைஞரை கவ்வியது . இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரை கைது செய்த காவல்துறையினர் தங்களது விசாரணையில் இறங்கினர்.
காவல்துறையின் கடுமையான விசாரணையில் இரண்டு நபர்களையும் கொலை செய்தது தான் தான் என ஒப்புக் கொண்டார் அபிஷேக். அந்த அரவையும் மில்லின் காவலாளியான வெங்கடேஷ் ஆதரவற்ற முதியவர் என்பதால் அவரிடம் நிறைய பணம் இருக்கும் என்று நினைத்து அவரை அடித்துக் கொன்றதாக கூறி இருக்கிறார். மேலும் இந்த கொலையை பார்த்ததால் சண்முகா என்பவரையும் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். கடைசியில் அந்த முதியவரிடமிருந்து வெறும் 485 ரூபாய் தான் கிடைத்தது என்றும் தனது வாக்கு மூலத்தில் தெரிவித்திருக்கிறார் அபிஷேக். இதனைத் தொடர்ந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறை சிறையில் அடைத்தது.