கொரோனோ வைரஸை தடுக்க ஊமத்தை பூ மருந்து! 8 பேருக்கு நேர்ந்த விபரீதம்!
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவிய நிலையில் 4,400-க்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.124பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது எனவும், சமூக விலகலை பின்பற்ற வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இத்தகைய கொடிய வைரஸுக்கு இதுவரை எந்த நாடுகளும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. பல நாட்டு வல்லுநர்களும் மருந்து கண்டு பிடிப்பதற்காக தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் கொரோனாவை தடுப்பதற்கு ஊமத்தைபூவை பயன்படுத்தி மருந்து தயாரித்துள்ளனர். மேலும் அதனை 8 பேர் குடித்துள்ளனர். அதனை தொடர்ந்து அவர்களுக்கு மயக்கம், வாந்தி ஏற்பட்ட நிலையில் தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வதந்திகளை நம்பாதீர்கள். சரியான மருந்துகளை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று சித்தூர் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.