புதிய கட்சி தொடங்கியும் அமரீந்தர் சிங் தோல்வி.. தவிடுபிடியான ராஜதந்திரங்கள்..!
உத்திரபிரதேசம், உத்திரகன்ட், கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. பஞ்சாபில் ஆம் ஆத்மீ ஆட்சி உறுதியாகியுள்ள நிலையில், பிற 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டப்பேரவை தொகுதிகளில் ஆம் ஆத்மீ 92 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 18 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜகவுக்கு சொற்ப அளவிலான தொகுதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் காங்கிரசில் இருந்து தனிக்கட்சி தொடங்கி புதிய கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த அம்மாநில முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் பாட்டியாலா தொகுதியில் 19,873 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அவரை எதிர்த்துபோட்டியிட்ட அஜித் பால் சிங் கோலி ஆம் ஆத்மீ வேட்பாளர் வெற்றி அடைந்தார்.
பஞ்சாப் மாநிலத்தை பொறுத்த வரையில் காங்கிரஸ் கட்சி பலம்பொருந்திய கட்சியாக பார்க்கப்பட்டு வந்த நிலையில், அமரீந்தர் சிங்குக்கு அங்கு செல்வாக்கு அதிகம். அதனால் புதிய கட்சி தொடங்கினாலும் பெருவாரியான இடத்தில் வெற்றி அடைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது அவருக்கு பேரிழப்பை தந்துள்ளது.