#BigBreaking: காங்கிரஸ் கோட்டையை துடைப்பத்தால் சுத்தம் செய்யப்போகும் ஆம் ஆத்மீ.. தனிப்பெரும்பான்மை முன்னிலை.!
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மீ தலைமையிலான ஆட்சி அமைவதை தேர்தல் முன்னிலை நிலவரங்கள் உறுதி செய்துள்ளன.
உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்திரகன்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு பல்வேறு கட்டமாக தேர்தல்கள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று மார்ச் 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. இதனால் அம்மாநிலங்களில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
காலை முதலாகவே வாக்குகள் எண்ணத் தொடங்கப்பட்டுவிட்ட நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கோட்டை என்பது தவிடுபிடியாகியுள்ளது. ஆம், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கொடிகட்டி பறந்து இருந்த நிலையில், அம்மாநிலத்தில் கடந்த 3 வருடமாக நடைபெற்ற அரசியல் பிரச்சனைகள் காரணமாக மக்கள் மாற்றத்தை தேடியுள்ளனர்.
இந்த மாற்றத்தை தனதாக்க விரும்பிய பாஜகவும், ஆம் ஆத்மீயும் எதிரெதிர் அணிகளில் களமிறங்கிய நிலையில், காங்கிரசும் தனித்து களம்கண்டது. இந்த நிலையில், தேர்தல் முன்னிலை நிலவரங்கள்படி, பஞ்சாப் மாநில சட்டப்பேரவையை அலங்கரிக்க மொத்த 117 இடங்களில் 59 இடங்களில் வெற்றி அடைய வேண்டும்.
ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து முன்னிலையில் இருந்த ஆம் ஆத்மீ கட்சி, 70 க்கும் மேற்பட்ட இடங்களில் பெருவாரி வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. இதனால் பஞ்சாபில் ஆம் ஆத்மீ ஆட்சியை கைப்பற்றக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
டெல்லியை சுத்தம் செய்ய துடைப்பம் கொண்டு தேர்தலை சந்தித்த ஆம் ஆத்மீ அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அதே பாணியில் மக்களுக்கு மாற்றத்தினை கொடுக்க பஞ்சாபிலும் களமிறங்கியது. அங்கும் அவர்களுக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் வேட்பாளராக பகவத் மான் ஆம் ஆத்மீ சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அவரின் தலைமையில் ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.