எய்ம்ஸில் படிக்க சேர்த்துவிடுவதாக கூறி, 12 க்கும் மேற்பட்ட பெண் மருத்துவர்களை ஏமாற்றிய ஆசாமி.!
பெண் மருத்துவர்களை குறிவைத்து, முகநூலில் மோசடி செய்த ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியை சார்ந்த பெண் மருத்துவர்களில் சிலர், வேலைபார்த்தவாறு முதுகலைப்பட்டம் படிக்க விரும்பியுள்ளனர். இந்த நிலையில், இவர்களுக்கு முகநூலில் மருத்துவர் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
அவர் தன்னை மருத்துவர் என்று அறிமுகம் செய்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுகலை படிப்புக்கான இடங்களை வழங்குவதாக கூறி ஏமாற்றி இருக்கிறார். இவரது வலையில் சிக்கிய 12 க்கும் மேற்பட்ட பெண் மருத்துவர்கள் ஏமார்ந்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, 32 வயது நபரை கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் மருத்துவரே இல்லை என்பது உறுதியானது. மேலும், முகநூலில் போலியான பல்வேறு கணக்குகளை தொடங்கி, அவர்களுக்கு போலி மருத்துவர் உயர்படிப்புக்கு உதவி செய்ததாக அவரே பதிவிட்டுள்ளார்.
இதனைக்கண்ட பெண் மருத்துவர்கள், போலி மருத்துவர் தமக்கும் உதவி செய்வார் என்று நம்பி ஏமார்ந்துபோனது தெரியவந்துள்ளது. இந்த தகவலை தெற்கு டெல்லி காவல் உதவி ஆணையர் பெனிடா மேரி ஜெய்கர் தெரிவித்தார்.