இப்படி ஒரு கொடுமை யாருக்கும் வரக்கூடாது... தாய் இறந்தது அறியாமல் 4 நாட்கள் சடலத்துடன் தங்கியிருந்த சிறுவன்.!



The boy who stayed with the corpse for 4 days without knowing his mother was dead

ஆந்திர மாநிலம் சித்தூரில் தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றியவர் ராஜலட்சுமி. கடந்த 2 ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து தனது 10 வயது மகன் ஷியாம் கிஷோருடன் திருப்பதியில் வசித்து வருகிறார். இந்தநிலையில், கடந்த சில நாட்களாக ராஜலட்சுமி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். 

இந்தநிலையில், கடந்த 8ஆம் தேதி இரவு வீட்டில் ராஜலட்சுமி சாப்பிட்டு விட்டு அறையில் தூங்கினார். அப்போது படுக்கையிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிகிறது. ஆனால் அவரது மகன் ஷியாம் கிஷோர் தன்னுடைய அம்மா தூங்கிறார் என நினைத்துக்கொண்டு அவரின் சடலத்தின் அருகிலேயே படுத்து தூங்கியுள்ளான்.

தொடர்ந்து நான்கு நாட்களாக தனது தாய் உறங்குவதாக நினைத்து ஷியாம் கிஷோர் பிரிட்ஜ் மற்றும் சமையலறையில் இருந்த பொருட்களை மட்டும் சாப்பிட்டு இருந்துள்ளான். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுவனின் தாயின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் பயந்துபோன ஷியாம் கிஷோர் தனது மாமாவுக்கு தொலைபேசியில் அழைத்து அம்மாவின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்துள்ளான். 

மேலும், வீட்டில் துர்நாற்றம் வீசுவதையறிந்த அக்கம் பக்கத்தினரும் ராஜலட்சுமி வீட்டுக்கு வந்து பார்த்தனர். அப்போது ராஜலட்சுமி படுக்கை அறையில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். அங்கு சிறுவன் மட்டும் தனியாக இருந்தான் அதைக் கண்டு அதிர்ந்துபோன அவர்கள் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நான்கு நாட்கள் தாயின் சடலத்துடன் சிறுவன் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.