"எம்மதமும் எங்களுக்கு சம்மதம்".. கெத்து காட்டிய அண்ணாமலை.!!
கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" யாத்திரை மூலமாக தமிழக மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து நடை பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
தமிழகம் முழுவதும் இந்த யாத்திரையானது நடைபெற்று வரும் நிலையில், நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணிக்கு சென்று இருந்தார். அங்கு அவருக்கு மேளதாளங்கள் முழங்க தொண்டர்கள் மற்றும் பொதுமக்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முருகன் கோவிலில் பூஜைகள் செய்து திருநீறு, வெள்ளி வேல் ஆகியவை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேசிய அண்ணாமலை, "திராவிட கட்சிகள் ஜாதி, அரசியல், குடும்ப அரசியல், ஊழல் என மக்களை ஏமாற்றி வருகிறது. இவ்வாறான அடக்கு முறையை அகற்ற மக்கள் முன்னேற வேண்டும்.
எம்மதமும் எங்களுக்கு சம்மதம் என்பதாலேயே அனைத்து மத ஆலயங்களுக்கும் சென்று வழிபடுகிறோம். அவர்களும் எங்களுக்கு மிகுந்த உற்சாக வரவேற்பை வழங்குகின்றனர்.
திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் மக்களின் அடிப்படை தேவைகள் கூட நிறைவேற்றப்படாமல் இருக்கிறது என கூறினார். அதனைத்தொடர்ந்து அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அண்ணாமலை அதனை நிவர்த்தி செய்வதாகவும் உறுதியளித்தார். பலரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வின் போது அண்ணாமலை திருத்தணி சிஎல்ஐ தூய மாதா தேவாலயத்தில் மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு பிரார்த்தனை செய்தார். முன்னதாக பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தர்மபுரியில் என் மண் என் மக்கள் பயணத்தின் போது, தேவாலயத்திற்கு சென்று வழிபட முற்பட்டார். அச்சமயம் அவரை அங்கிருந்த சில இளைஞர்கள் தடுத்து நிறுத்தி தங்களது வாதத்தை முன்வைத்தனர். அவர்களுக்கு தக்க பதில் வழங்கிய அண்ணாமலை தேவாலயத்தில் வழிபட்டார்.
அதன் வழியாக தற்போது செல்லும் இடமெல்லாம் எம்மதமும் எங்களுக்கு சம்மதம் என்பதை தெரிவிக்கும் வகையில், தனது பிரச்சாரத்தையும் மேற்கொண்டு அனைத்து தரப்பு மக்களின் ஆசியையும் பெற்று வருகிறார்.
இந்நிகழ்வில் மத நல்லிணக்கத்திற்கு தலைசிறந்த எடுத்துக்காட்டாக அண்ணாமலை மற்றும் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் உட்பட பிற பாஜ., நிர்வாகிகள் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்தனர்.