தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டி: புதிய சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்..!



2nd Test vs South Africa: James Anderson sets a new record

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடந்த முதலாவது போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள மைதானத்தில் நேற்று தொடங்கியது. 'டாஸ்' ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர், முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார்.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். அந்த அணி முதல் இன்னிங்சில் 53.2 ஓவர்களில் 151 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ககிசோ ரபடா 36 ரன்களும், கீகன் பீட்டர்சன், கைல் வெரைன் தலா 21 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன், பிராட் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்

அதன் பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. முன்னதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் 40 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தப் போட்டியில் களம் இறங்கியதன் மூலம் புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாடும் 174 வது சர்வதேச டெஸ்ட் போட்டி இதுவாகும். அதே சமயம் அவருக்கு சொந்த மண்ணில் ஆடும் 100 வது டெஸ்ட் போட்டியாக இது அமைந்துள்ளது. இதன் மூலம் உள்நாட்டில் 100 டெஸ்டுகளில் கால்பதித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 200 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆனால், அவர் இந்திய மண்ணில் 94 டெஸ்டுகளும், வெளிநாடுகளில் 106 டெஸ்டுகளும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.