குஷ்புவிடம் வாய்ப்பு கேட்ட ஹீரோ.. செருப்பால அடிப்பேன் என திட்டிய நடிகை.!
அதிர்ச்சி தோல்வி! இங்கிலாந்து அணிக்கு சரியான பாடம் கற்பித்த இலங்கை அணி
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் 27வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி இலங்கை அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் முதல் மூன்று ஓவர்களிலேயே ஆட்டமிழந்தனர். அதன்பின்பு களமிறங்கிய பெர்னான்டோ, மென்டிஸ், மேத்யூஸ் நிதானமாக ஆட இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் எடுத்தது. மேத்யூஸ் அதிகபட்சமாக 85 ரன்கள் எடுத்தார்.
இந்த இலக்கை எளிதாக வென்று விடலாம் என களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு இரண்டாவது பந்திலேயே பெயர்ஸ்டோவின்(0) விக்கெட்டை மலிங்கா கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து ஏழாவது ஓவரில் மற்றொரு துவக்க ஆட்டக்காரர் வின்ஸ்(14) விக்கெட்டையும் கைப்பற்றினார் மலிங்கா.
பின்னர் ஆடத் துவங்கினர் ஜோ ரூட் மற்றும் இயான் மோர்கன். 19 ஆவது ஓவரில் மோர்கன்(21), உதானா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பிறகு மீண்டும் பந்துவீச வந்த மலிங்கா 31 ஆவது ஓவரில் அரைசதம் அடித்த ஜோ ரூட்(57) விக்கெட்டையும் கைப்பற்றினார். பின்னர் 33 ஆவது ஓவரிலேயே அதிரடி ஆட்டக்காரர் பட்லர்(10) விக்கெட்டையும் சாய்த்தார் மலிங்கா.
பின்னர் சூழல் பந்தில் மிரட்ட துவங்கிய தனஞ்ஜெயா, 39 ஆவது ஓவரில் மெயின் அலி மற்றும் 41 ஆவது ஓவரில் வோக்ஸ் மற்றும் அடில் ரஷித் விக்கெட்டை கைப்பற்றினார். அதனை தொடர்ந்து ஆர்ச்சர் 44 ஆவது ஓவரிலும் மார்க் வுட் 47 ஆவது ஓவரிலும் ஆட்டமிழக்க இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மலிங்கா 4, தனஞ்ஜெயா 3 விக்கெட்டுகளை கைபற்றினர். இங்கிலாந்து அணியின் ஸ்டோக்ஸ் கடைசி வரை போராடி 82 ரன்கள் எடுத்தார்.
பேட்டிங்கில் பேர்ஸ்டோவ், ரூட், மோர்கன், ஸ்டோக்ஸ், பட்லர் என மிகப்பெரிய ஜாம்பவான்கள் இருந்தும் 233 ரன்கள் எடுத்து இலங்கையை வெல்ல முடியாமல் போனது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இலங்கை அணி இந்த தொடரில் இரண்டாவது வெற்றியையும், இங்கிலாந்து அணி இரண்டாவது தோல்வியையும் பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி ஏற்கனவே பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது.