20 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்தை தெறிக்கவிட்டு வெஸ்ட் இண்டீஸ் அணி சாதனை..! முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி..!



england-vs-west-indies-first-test-wi-won-by-4-wickets

இங்கிலாந்து - வெஸ்டிண்டிஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்டிண்டிஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.

கொரோனா காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் கடந்த சில மாதங்களாக நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் நடக்க தொடங்கியுள்ளது. முதலாவதாக இங்கிலாந்து, மேற்கிந்திய அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயர் நகரில் உள்ள ரோஸ் பெளவுல் மைதானத்தில் கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது.

முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மழை, வானிலை காரணமாக ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக மாறியது. இதனால் வெஸ்டிண்டிஸ் அணி வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி வீரர்கள் தடுமாறினர்.

அதிகபட்சமாக கேப்டன் (பொறுப்பு) பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள் சேர்க்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனை அடுத்து களமிறங்கிய வெஸ்டிண்டிஸ் அணி வீரர்கள் நிதானமாக ஆடி 318 ரன்கள் எடுத்து 114 ரன்கள் முன்னிலை பெற்றது.

114 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கியது. இந்த முறை 313 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆட்டமிழந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 200 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையுடன் வெஸ்டிண்டிஸ் அணி வீரர்கள் களமிறங்கினர். 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெஸ்டிண்டிஸ் அணியின் வெற்றி கேள்விக்குறியானது, இதனை அடுத்து களமிறங்கிய வீரர்கள் நிதானமாக ஆடி வெஸ்டிண்டிஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தனர்.

கடந்த 2000 ஆண்டிற்கு பிறகு, சுமார் 20 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்து நாட்டில் அந்த அணிக்கு எதிராக வெஸ்டிண்டிஸ் அணி டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.