2-வது டெஸ்ட்: 10 விக்கெட்டுகள் வீழ்த்திய உமேஷ்; 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!



india won in 2nd test against wi

ஹைதராபாத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 311 ரன் குவித்தது. ரோஸ்டன் சேஸ் 106 ரன்னும், கேப்டன் ஹோல்டர் 52 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் 6 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்று 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன் எடுத்து இருந்தது. பிரித்விஷா 70 ரன் எடுத்தார். ரகானே 75 ரன்னும், ரிசப்பந்த் 85 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

india won in 2nd test against wi

இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. ரகானேயும், ரி‌ஷப்பந்தும் தொடர்ந்து விளையாடினர். ஆட்டம் தொடங்கிய 3-வது ஓவரில் ரகானே ஆட்டம் இழந்தார். அவர் 183 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 80 ரன்கள் எடுத்தார். ஹோல்டர் அவரது விக்கெட்டை கைப்பற்றினார். அப்போது ஸ்கோர் 314 ஆக இருந்தது. அடுத்து வந்த ரவிந்திர ஜடேஜா ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். 

india won in 2nd test against wi

மறுமுனையில் இருந்த இளம் வீரரான ரிசப் பந்த் தனது 2-வது சதத்தை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 92 ரன் எடுத்து இருந்தபோது கேப்ரியல் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 134 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார்.

ரிசப்பந்த் 2-வது முறையாக சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டிலும் அவர் 92 ரன்னில் வெளியேறி இருந்தார். பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகவே இந்திய அணி 367 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் சார்பாக ஹோல்டர் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

56 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கியது மேற்கிந்திய தீவுகள் அணி. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ப்ராத்வைட் மற்றும் ஹோல்டர் இருவருமே ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகினர். அவர்களை தொடர்ந்து ஹோப் 28 ரன்களும் அம்பரீஷ் 38 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆக மேற்கிந்திய தீவுகள் அணி 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

india won in 2nd test against wi

இந்திய அணியின் சார்பில் அபாரமாக பந்து வீசிய உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளும் ஜடேஜா 3 விக்கெட்டுகளும் அஸ்வின் 2 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

75 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பிரிதிவ் ஷா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் அவுட் ஆகாமல் 33 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 16 ஓவர்களில் வெற்றி இலக்கான 75 ரன்களை விக்கெட் இழப்பு இல்லாமல் எடுத்து அபார வெற்றி பெற்றது.

india won in 2nd test against wi

இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரே ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தொடரின் 2 டெஸ்ட் போட்டிகளிலும் மூன்றே நாட்களில் முடிந்துள்ளது. இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது.