3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
ரஹானே அசத்தல்; பும்ரா மிரட்டல்! முதல் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி
மேற்கு இந்திய தீவுகள், ஆண்டிகுவாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடந்த வியாழக்கிழமை துவங்கிய இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 297, வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்கள் எடுத்தன.
இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 51, ரஹானே 102, ஹனுமா விஹாரி 93 ரன்கள் எடுத்தனர். 112.3 ஓவர்கள் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
419 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்களை ஆரம்பத்திலேயே மிரட்ட துவங்கினார் பும்ரா. 2, 4 மற்றும் 8 ஆவது ஓவரில் பும்ரா தலா ஒரு விக்கெட்டுகளையும், 5 மற்றும் 7 ஆவது ஓவர்களில் இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முதல் 10 ஓவரிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்தது.
அதன் பின்னர் சமியும் தனது பங்கிற்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் எடுத்தது. பின்னர் கடைசி விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கீமர் ரோச் மற்றும் கம்மின்ஸ் இணைந்து 50 ரன்கள் எடுத்தனர். அணியின் எண்ணிக்கை 100 அடைந்ததும் ரோச் 38 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 183 ரன்கள் குவித்த ரஹானே இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் வெற்றியை இந்தியா பெற்றது.