பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஐ.பி.எல் 2023 ல் இன்று 2 போட்டிகள்: சவால்களை சமாளித்து 3 வது வெற்றியை ருசிக்கப் போவது யார்?!!
கடந்த 2008 ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 12 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்று மாலை 3.30 மணிக்கு ஆமதாபாத் மைதானத்தில் நடைபெறும் 13 ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகிறது.
இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் 14 வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. கடந்த 2 தொடர்களில் 8 வது இடத்துக்கு தள்ளப்பட்ட ஐதராபாத் அணி இந்த தொடரிலும் சரிவை சந்தித்து வருகிறது. அந்த அணி தனது முதல் 2 லீக் போட்டிகளில் முறையே ராஜஸ்தான், லக்னோ அணிகளிடம் தோல்வியை சந்தித்தது.
ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் 2 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று உற்சாகத்துடன் காணப்படுகிறது. அந்த அணி முறையே கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு சிறப்பாக உள்ளது. வெற்றியை தொடர பஞ்சாப் அணியும், சரிவில் இருந்து மீள ஐதராபாத் அணியும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி தனது முதல் 2 லீக் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளை அடுத்தடுத்த போட்டிகளில் வீழ்த்தியுள்ளது. இதன் காரணமாக சொந்த மண்ணில் நடைபெறும் போட்டியில் மீண்டும் பங்கேற்கும் குஜராத் அணி 'ஹாட்ரிக்' வெற்றியை நோக்கி களமிறங்கும்.
நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தன்னுடைய முதல் போட்டியில் 7 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வியுற்றது. அடுத்த போட்டியில் அதிரடியாக செயல்பட்டு 81 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. ஆனால் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வரும் குஜராத் அணியை கொல்கத்தா அணி சமாளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.